மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டிலும் நிலநடுக்கத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சட்டுசக் மார்கெட் பகுதியில் கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பணியாற்றிவந்த 100-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்றும் தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.
அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்திலும் பாதிப்பு: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன.

தாய்லாந்தில் இதுவரை 10 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக் நகரின் அடுக்குமாடி கட்டிடம் கட்டுமானப் பணியிடத்தில் 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
15 டன் நிவாரணப் பொருள்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. உணவுப் பொருட்கள், கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் பாதிக்கப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நிவாரனத்துகாக 5 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் “மியான்மர் அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். மியான்மருக்கு உதவி செய்யப் போகிறோம்.” என்றார்.
மியான்மர் நாட்டின் முந்தைய அரசுகள் இதுபோன்ற நெருக்கடி காலங்களில் கூட வெளிநாட்டு நிதியை ஏற்பதில் சுணக்கம் காட்ட நிலையில் தற்போதைய அதிபர் மின் ஆங் ஹ்ளெய்ங் தலைமையிலான அரசு வெளிநாட்டு நிதிகளை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக வெளிப்படையாகவே கூறியுள்ளது.
தொடரும் மீட்புப் பணிகள்: இதற்கிடையில் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை 1000-ஐ கூட தாண்டலாம் என அச்சம் எழுந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு ரத்தம் இருப்பு இல்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.