மதுரை: “யாருடைய கூடடணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் ரூ.17.95 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது: “திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்பது சுத்த பொய். அது சூட்கேஸ் கூட்டணி.
நடிகர் விஜய் தற்போதுதான் களத்துக்கு வந்துள்ளார். தனது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த திமுக- தவெக இடையே போட்டி என்றுதான் சொல்வார். திமுக எப்படியெல்லாம் வேஷம் போடுகிறது என்பதைதான் விஜய் அவரது கட்சி பொதுக்குழுவில் பேசியுள்ளார். அவர் அதிமுகவை பற்றி விமர்சனம் செய்யவில்லை.
கூட்டணிக்கு இன்னும் காலம் இருக்கிறது. நாங்கள் யாருடைய கூட்டணிக்காகவும் துடிக்கவில்லை. யாரும் போய்விடாதீர்கள் என்று நாங்கள் சூட்கேஸும் கொடுக்கவில்லை. கூட்டணி பற்றி கற்பனையாக கருத்து சொல்ல முடியாது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அமித் ஷா சந்திப்பையும் தெளிவாக கூறிவிட்டார்.
மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பங்கேற்க போகிறார். ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி கரோனா காலத்தில் கூட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்காமல் முழு ஊதியத்தையும் கொடுத்தார்.
விவசாயிகளும் ஆதரவு தெரிவிக்கிறார். செங்கோட்டையன், அதிமுக அமைப்பு செயலாளராக உள்ளார். தமிழக கலாச்சாரம், எல்லோரையும் சந்திப்பது, மதிப்பது. நிர்மலா சீதாராமன் ஒரு தமிழர். மதுரையில் பிறந்தவர். அவரை செங்கோட்டையன் சந்திதத்தில் என்ன தவறு இருக்கிறது. அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரிப்பதை சகித்துக் கொள்ள முடியாதவர்களும், தேர்தல் வியூகத்தை பார்த்து கதறுபவர்களும் கற்பனையாக குழப்பம் விளைவிக்க பல்வேறு வசந்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள்”, என்று அவர் கூறினார்.