பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு, 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் பதிவு, பிரதமர் மோடி மீது தவெக தலைவர் விஜய் விமர்சனம் என பாஜக-வை சுற்றி தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகி வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான் மாநில அரசுடன் மோதல் ஏற்படுகிறதா? – அரசியல் ரீதியாக செயல்படுவது என்பதைத் தாண்டி, மக்கள் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து, அவர்களுக்காக ஆளுநர்கள் செயல்படுவது ஆட்சியாளர்களுக்கு பிடிப்பதில்லை. நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எங்களுக்குத்தான் உரிமை என்ற வசனத்தை அடிக்கடி அவர்கள் சொல்வார்கள்.
அதேசமயம், மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களது நடவடிக்கைகள் இருந்தால், அதை ஆளுநர்கள் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைக்கின்றனர். நான் ஆளுநராக பதவி வகித்த ஒவ்வொரு நாளும், மக்கள் நலன் சார்ந்தே செயல்பட்டேன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். மற்ற மாநிலங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளை பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது.
இரு மொழிக் கொள்கையில் படித்த தங்களைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வந்திருக்கும் போது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய அரசு நிர்பந்திப்பது சரியா? – இருமொழிக் கொள்கையில் தான் நாங்கள் படித்தோம். அன்றைய சூழல் வேறு. இன்றைய சூழல் வேறு. இன்றைய அறிவியல், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒரு இணைப்பு மொழி தேவையாய் உள்ளது. இதை உணராமல் திமுக இந்தி திணிப்பு என்ற பொய் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது.
மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி நாங்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 30 லட்சம் பேர் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர். மக்கள் ஆதரிக்கிற, மக்கள் நலனுக்கான திட்டங்களை தடுக்க திமுக-வுக்கு உரிமை இல்லை. இவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழியை பிரதானப் படுத்திவிட்டு, அரசியலுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அநீதி இழைப்பதை ஏற்க முடியாது.
மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை கொடுக்க மறுத்து, கொத்தடிமை போல் நடத்துவதாக முதல்வர் ஆவேசப்பட்டிருக்கிறாரே? – இது உண்மை அல்ல. மாநில அரசுதான் மத்திய அரசை ஒரு எதிரி அரசை போல சித்தரிக்கிறது. எதற்கெடுத்தாலும் இணக்கமற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர். தமிழக அரசு ஒன்பது லட்சம் கோடி கடனை வாங்கி வைத்துவிட்டு, மத்திய அரசு பத்தாயிரம் கோடி கொடுத்தால் கூட வேண்டாம் என்று முதல்வர் வீர வசனம் பேசுவது எப்படி சரியாக இருக்கும்? அரசியலுக்காக இவர்கள் மோதல் போக்கை கடைபிடிப்பதால், தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைக்காமல் போகிறது. தெலங்கானாவில் இதேபோல் மத்திய அரசுக்கு எதிரான போக்கைக் கொண்டிருந்த சந்திரசேகர் ராவ் அரசை அந்த மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். அதே நிலை இங்கும் ஏற்படும்.
என்டிஏ கூட்டணிக்கு எதிராக இண்டியா கூட்டணியை கட்டமைத்ததில் தொடங்கி, தொகுதி வரையறை விஷயத்தில் மாநில முதல்வர்களை திரட்டி ஆலோசனைக் கூட்டம் போட்டது வரை பாஜக-வுக்கு பெரும் சவாலாக இருக்கிறதே திமுக? – தமிழகத்தில் ஜாக்டோஜியோ அமைப்பில் தொடங்கி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து விட்டனர். நாள்தோறும் கொலை, கொள்ளை பட்டியல் கூடிக் கொண்டே போகிறது. சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொங்கல் பரிசு கூட கொடுக்க முடியாமல் கடனில் தவிக்கும் சூழ்நிலை. இது போன்ற பல நெருக்கடிகளை மறைக்க பாஜக-வுக்கு நெருக்கடி கொடுப்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
மகளிர் உரிமைத்தொகை, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித் தொகை என தமிழக அரசின் திட்டங்களை பிறமாநில அரசுகளும் பின்பற்றுவது திராவிட மாடல் அரசின் வெற்றி இல்லையா? – மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கெனவே மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான். திமுக அரசு அமைந்த 2 ஆண்டு கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், டெல்லியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதுமே, பெண்களுக்கு ரூ.2500 உரிமைத்தொகை வழங்கும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதை விட பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகாராஷ்டிராவில், லட்சாதிபதி திட்டத்தின் கீழ், 75 லட்சம் பெண்களை லட்சாதிபதி ஆக்கியிருக்கிறார்கள்.
மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் 30 சதவீதம் பெண்களுக்கு கடன் கொடுத்து தொழில் முனைவோர் ஆக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மகளிருக்கான திட்டங்களை செயல்படுத்துவது மகிழ்ச்சி. ஆனால், அதை ‘ஓசி பஸ் பயணம்’ என்று அமைச்சர்களே கிண்டல் செய்வது வேதனையாக உள்ளது. இவர்கள் வாக்குக்காக இதனை செய்கிறார்களே தவிர, முழு அக்கறையுடன் செய்யவில்லை ஆயிரம் ரூபாயை அக்காவிடம் கொடுத்துவிட்டு, டாஸ்மாக்கில் டார்கெட் வைத்து அண்ணனிடம் அதனை பறித்து விடுகிறார்கள்.
நடிகர் விஜய், திமுக-வுடன் சேர்த்து பாஜக-வையும் எதிரி பட்டியலில் வைத்து விட்டது பற்றி..? – விஜய் போன்று புதிதாக அரசியல் களத்துக்கு வருபவர்கள், புதிதாக விஷயங்களைச் சொல்லி, புதிய பாதையில் பயணிக்க வேண்டும், ஆனால், விஜய் திமுக சொல்வதை கிளிப்பிள்ளையைப் போல் சொல்கிறார். விஜய் படங்கள் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் வெளியாகிறது. ஆக, தொழில் ரீதியாகவே மும்மொழி தேவைப்படும்போது, திமுக சொல்வது போல் மும்மொழி வேண்டியதில்லை என்று விஜய் பேசுகிறார். சினிமாவில் சண்டை, நடனம், காமெடி போன்ற காட்சிகள் வைத்துக் கொள்வது போல், ஒரு புரிதல் இல்லாமல் விஜய் கொள்கைகளை பேசி வருகிறார்.
2026 தேர்தலில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையில்தான் போட்டி என்கிறாரே விஜய்? – விஜய்க்கு நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி எதுவும் கிடையாது. மற்ற கட்சிகளுக்கு நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி இருக்கிறது. இன்றைக்கும், விஜய் கால்ஷீட் கொடுத்து தான் அரசியல் களத்தில் இருக்கிறார். அவர் இன்னும் அரசியலில் கால் பதிக்கவில்லை. தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டுமானால் இது போன்ற பேச்சு உதவியாக இருக்கலாம். தமிழக அரசியல் அந்த நிலையில் இல்லை. இங்கு பலமான பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
வாக்குக்காக காங்கிரஸுடனும் கொள்ளையடிப்பதற்காக பாஜக-வுடனும் திமுக கூட்டணி வைத்திருப்பதாக விஜய் சொல்கிறாரே? – திமுக-வை முழு வீச்சில் எதிர்க்கும் பாஜக-வின் முயற்சிகளை திசை திருப்ப இந்த குற்றச்சாட்டு உதவும். திமுக கொள்கைகளை எதிர்க்கும் நாங்கள் பி டீம் என்றால், திமுக-வின் கொள்கைகளை அப்படியே ஒப்புவிக்கும் தவெக, திமுக-வின் பி டீம் என்று நாங்கள் சொல்ல எவ்வளவு நேரமாகும்?
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக-வை இறக்குவதற்குத் தான் தேர்தல் நடக்கிறது. அவர்களை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறாரா அல்லது பாஜக-வை விமர்சிப்பதன் மூலம், அவர்கள் (திமுக) மீது இரக்கப்படுகிறாரா என்று தெரியவில்லை.
‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு’ என்ற அமித் ஷாவின் பதிவு தமிழக மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? – தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். அதற்காக நாங்கள் பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதன் மூலம் ஒரு கூட்டணி அரசைக் கொண்டு வருவோம் என்று அமித் ஷா சொல்லி இருக்கிறார்.
என்டிஏ கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம்பெறுமா? – கூட்டணி விஷயத்தில் எங்களது மத்திய தலைமை என்ன வழிகாட்டுகிறதோ அதன்படி நாங்கள் நடப்போம். எங்களது கருத்தை மத்திய தலைமை கேட்கும் போது தெரிவிப்போம். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பிஉதயகுமார் அமித் ஷாவை ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று பாராட்டி இருக்கிறாரே..? – அவர் உண்மையைச் சொல்லி இருக்கிறார். உண்மையைச் சொன்னால் உடனே கூட்டணி என்று நினைக்க வேண்டியதில்லை. எதிர்த்துச் சொன்னால் கூட்டணி இல்லை என்றும் நினைக்க வேண்டியதில்லை. உள்துறை அமைச்சரை அவர் பாராட்டியதை நான் பாராட்டுகிறேன்.
“சீமான் எங்கள் டீம் பார்ட்னர் இல்லை. அவர் எங்கள் தீம் (கருத்தியல்) பார்ட்னர்” என்று சொன்னீர்களே… அந்த இணக்கம் தேர்தல் வரை தொடருமா? – பெரியார் குறித்து பாஜக-வின் நிலைப்பாட்டை ஒட்டி அவர் கருத்து தெரிவித்தபோது இந்தக் கருத்தை சொன்னேன். அதற்காக சீமானின் எல்லா கருத்துகளுக்கும் நாங்கள் ஒத்துப்போக வேண்டியது இல்லை. அதேசமயம், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. இதில் எல்லோரும் உறுதியாக இருந்து திமுக-வை வேரறுக்கப் போகிறோமா அல்லது உதிரியாக இருந்து திமுக வெற்றி பெற அனுமதிக்கப் போகிறோமா என்பது குறித்து எல்லோரும் யோசிக்க வேண்டும்.
“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்ற உங்களது இலக்கை நோக்கிய பயணத்தில் தமிழக பாஜக எவ்வளவு தூரம் பயணித்துள்ளது? – தமிழக பாஜக-வில் புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். கட்சி கட்டமைப்புகள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் மூலம் கிளை முதல் மாவட்டம் வரை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மண்டல வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளோம். மத்திய அமைச்சர்களை வரவழைத்து தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி, அதாவது எங்கள் கருத்துப்படி, டபுள் இன்ஜின் அரசு தமிழகத்தில் விரைவில் அமையும்.
மீண்டும் மாநிலத் தலைவர் பதவிக்கு வரும் எண்ணம் உண்டா? – 25 ஆண்டு கால பாஜக-வின் பணியில் மாநில தலைவராக, ஆளுநராக பணிபுரிந்துள்ளேன். இந்த அனுபவங்கள் கட்சிக்கு பலன் தர வேண்டும் என்ற நோக்கில் உழைக்கிறேன். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வருவது என்பது ஒரு சுலபமான முடிவு அல்ல. என் உழைப்பு கட்சிக்காக, தமிழக மக்களுக்காக பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த முடிவை எடுத்தேன்.
தலைவர் பதவியை பொறுத்தவரை, கட்சிக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. அதை நான் அப்படியே பின்பற்றுவேன். கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதற்காக நான் கடுமையாக உழைப்பதற்கு தயாராக இருக்கிறேன். இப்போது உள்ள தலைவர் கடுமையாக உழைக்கிறார். யாரை தலைவராக கட்சி முன் நிறுத்தினாலும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.