அதிமுகவுடன் கூட்டணி; எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: அண்ணாமலை உறுதி

என்னால் யாருக்கும் பிரச்சினை வராது, மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘யுகாதி’ பண்டிகை நல்வாழ்த்துக்கள். சென்னை – ராமேஸ்வரம் இடையே தற்போது இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மூன்றாவது ரயில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை வழங்க வேண்டும். விரைவில் மத்திய அமைச்சர் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார். கோவை-கரூர் இடையே சாலை விரிவாக்க பணியை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அதிக நிதி தேவைப்படும் திட்டம். விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம்.

‘சி ஓட்டர் சர்வே’ முடிவுகளின்படி தமிழக முதல்வருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளது. நான்கு பேரில் மூன்று பேர் நிராகரிப்பதாக கூறுகிறது. நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வு முடிவுகளும் அதை தான் கூறுகிறது. ஒரு கட்சி தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐந்து மண்டலங்களில் மூன்று மண்டங்களில் வெற்றி பெற வேண்டும். இன்று தென்மாவட்டங்களில் விவசாயம், தொழில் நலிவடைந்துள்ளது.

கூட்டணி குறித்து எந்த கருத்தையும் நான் கூற விரும்பவில்லை. எனக்கு எந்த ஒரு கட்சி மீதும், தலைவர் மீதும் கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. எனவே பொறுத்திருந்து பாருங்கள். நான் டெல்லியில் பேசும் போது தொண்டனாக பணியாற்றவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளேன். அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது அதிகாரத்திற்கு அல்ல. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நான் கட்சியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை அதே உணர்வோடு தான் உள்ளேன். பாரத பிரதமர் ஏப்ரல் 6-ம் தேதி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்து தமிழகம் திரும்புகிறார். பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பின், அரசு நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட பின் திரும்பி செல்கிறார்.

மக்களவை தேர்தலுக்கு பின் தமிழகத்திற்கு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். எனது தனிப்பட்ட வளர்ச்சியோ, மற்றவர் வளர்ச்சியோ முக்கியம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.