தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மாநிலச் செயலாளர்

ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளரும் துணை செயலாளருமான எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தியுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய எம்.பி ஆ.ராசா, “நவீன தொழில்நுட்பங்கள் வளராத காலகட்டத்தில் உலகில் உள்ள வரலாறுகளை எல்லாம் கொண்டு வந்து தம்பிகளுக்கு கடிதங்களாக தந்தவர் பேரறிஞர் அண்ணா. மனித சமுதாயம் பகுத்தறிவை நோக்கித்தான் நகர வேண்டும் என போராடியவர் பொியார். சாதி ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்ற பெரியாரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்றால், அரசியல் அதிகாரம் தேவை என அண்ணா உணர்ந்தார். அதற்காகத்தான் தி.மு.க – வை தொடங்கினார். ஓர் அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அதிகாரத்திற்கு வரவில்லை என்றால், அதன் கொள்கைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அடிக்கடி கூறுவார்.

கொள்கை இல்லாத அரசியல் கட்சி அழிந்து விடும். அ.தி.மு.க தலைமை என்கிற பெயரில் கொள்கையற்ற செயல்பாடுகளால் அந்தக் கட்சியை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கொள்கைதான் ஒரு கட்சிக்கான அடிப்படை. நாட்டில் பலரும் மோடியை அரசியல் ரீதியாக எதிர்கிறார்கள். ஆனால் சித்தாந்த ரீதியில் பா.ஜ.க – வையும், பிரதமர் மோடியையும் எதிர்ப்பதற்கு வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. இந்துத்துவா, மோடி, அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான தத்துவத்தை கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும், தி.மு.க -வும் தான்” என்றார்.