அமராவதி: ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. கத்திரி வெயில் தொடங்கும் முன்பே ஆந்திராவின் 150 மண்டலங்களில் நேற்று வெயில் 104 டிகிரியை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் பகல் நேரங்களில் வெப்பக்காற்றும், அனல் காற்றும் வீசி வருவதால் சுமார் 150 மண்டலங்களில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. குறிப்பாக ராயலசீமா, கடலோர ஆந்திர மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் காலை 8 மணி முதலே வெயில் சூட்டை உணர முடிகிறது. தொடர்ந்து பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் தலை காட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரகாசம் மாவட்டம் கொமராலு, நந்தியாலா, கமலாபுரம் ஆகிய மண்டலங்களில் நேற்று 105 டிகிரி வெயில் பதிவானது. எஸ். கோட்டா, அனகாபல்லி, அன்னமைய்யா ஆகிய பகுதிகளிலும் 104.5 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இதேபோன்று கர்னூல், கடப்பா, தாடிபத்ரி, அனந்தபூர், குண்டக்கல், திருப்பதி, நெல்லூர் ஆகிய பகுதிகளில் 104 டிகிரி வரை வெயில் பதிவானது. இதேபோல் சித்தூர், கிருஷ்ணா, மசூலிப்பட்டினம், ஏலூரு ஆகிய பகுதிகளில் 103 டிகிரி வெயில் பதிவானது.
கடும் வெயிலால் ஆந்திராவில் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடும் வெயில் காரணமாக இளநீர், மோர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விற்பனையும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.