புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கங்கை-யமுனை உட்பட 11 தேசிய நீர்வழிகள் உள்ளன, இவை உ.பி.யை மற்ற மாநிலங்களுடன் இணைக்கின்றன. இதன் காரணமாக மாநிலத்தில் நீர்வழி போக்குவரத்து மற்றும் நீர்வழி சுற்றுலாவை முதல்வர் யோகி அரசு மேம்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக 11 ஆறுகளில் 761 கி.மீ. தொலைவுக்கு நீர்வழி பாதையை அரசு அமைக்க உள்ளது.
இத்திட்டத்தின்படி 11 ஆறுகளின் படித்துறைகளில் தளங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதை அமல்படுத்த உள்நாட்டு நீர்வழி ஆணையத்தை உ.பி. அரசு உருவாக்கி உள்ளது. நீர்வழிப் பாதையை அமைக்க பிரயாக்ராஜ், வாராணசி முதல் காஜிபூர் வழியாக ஹால்டியா வரையிலான பாதை கங்கை ஆற்றில் தயாராக உள்ளது. அடுத்த கட்டத்தில் கான்பூர் வழியாக பரூக்காபாத் வரை நீட்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல், யமுனை, சரயு மற்றும் காக்ரா, கோமதி, சம்பல், பெத்வா, வருணா, கர்மனாஷா, ரப்தி, மந்தாகினி மற்றும் கென் ஆகிய ஆறுகளிலும் நீர் சுற்றுலாவின் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இதற்காக, பொதுப்பணி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம், நீர்ப் பாசனம் மற்றும் நீர்வளம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை களை சேர்ந்த பொறியாளர்கள் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இக்குழு 11 ஆறுகளின் தோற்றம் முதல் அவை பெரிய நதியுடன் இணையும் இடம் வரை இந்த அனைத்து குழுக்களும் ஒரு கணக்கெடுப்பை நடத்தும். நீர்வழிப் போக்குவரத்து மூலம் பொருட்கள் மற்றும் பயணிகளை எங்கெங்கு அழைத்து செல்வது பொருத்தமாக இருக்கும் என்று இக்குழு கண்டறியும். இத்திட்டத்துக்கு முதல்வர் யோகி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
லக்னோவில் உள்ள மாநில கட்டுமான கூட்டுறவு சங்கத்தின் 2-வது மாடியில் இதற்கான அலுவலகத்தை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சுமார் 15 ஆண்டுக்கு முன்பு வரை பிரயாக்ராஜில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறிய கப்பல்கள் மூலம் சிமென்ட் மூட்டைகள் அனுப்பப்பட்டன. பின்னர் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் கப்பல் போக்குவரத்தை அப்போதைய அரசு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.