நாக்பூர்: “ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர்களான கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோரின் நினைவிடம் இருக்கும் டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு அங்கு மாதவ் நேத்ராலயா பிரிமீயம் மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். நரேந்திர மோடி பிரதமரான பின்னர் ஆர்எஸ்எஸ் மையத்துக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: நாட்டில் ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளும் மருத்துவர்கள் ஆகவேண்டும் என்பதற்காக நாங்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்தினோம். மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்கியதோடு இல்லாமல், நாட்டில் செயல்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். அதேபோல் மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கைகளையும் இரட்டிப்பாக்கியுள்ளோம். தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே அரசின் குறிக்கோள்.
நமது அரசு, தாய்மொழியில் கல்வி வழங்க வேண்டும் என்ற தைரியமான முடிவினை எடுத்துள்ளது. இது,பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்த மாணவர்களும் மருத்துவராக மாறும் வாய்ப்பினை வழங்குகிறது. சுதந்திரத்துக்கு பின்பு முதல்முறையாக இது நடந்துள்ளது. நாடு தனது பாரம்பரிய மருத்துவ அறிவுடன் புதுமையான மருத்துவ அறிவினை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. நமது யோகா, ஆயுர்வேதம் உலகில் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவச் சேவையை பெறுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஜன் அவுசதி கேந்திரர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கு குறைந்த விலையில் மருத்துகளை வழங்குகின்றனர். சுமார் 1,000 டயாலிசிஸ் மையங்கள் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வருகிறது. இவை அனைத்தும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் மக்கள் ஆரம்ப சிகிச்சை மற்றும் மருத்துவர் ஆலோசனைகளைப் பெறும் வகையில், லட்சக்கணக்கான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் திறக்கப்பட்டுள்ளன. இப்போது கிராமத்தில் உள்ளவர்கள் மருத்துவச் சோதனைக்காக 1000 கி.மீ தூரம் செல்லவேண்டியது இல்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.
அதேபோல் ஸ்மிருதி மந்திருக்கு சென்றது குறித்து பேசிய பிரதமர், “இன்று நாக்பூரில் உள்ள சேவா சங்கத்தின் புனித லட்சியத்தின் மற்றுமொரு விரிவாக்கத்துக்கு சாட்சிகளாக நாம் இருக்கிறோம். புனித ராஷ்ட்ரா யாக்யா சடங்கு நாளில் இங்கு வந்திருப்பது எனது பாக்கியம். சைத்ர சுக்ல பிரதிபடா நாளான இன்று சிறப்பான ஒரு நாள். புனித நவராத்திரி இன்றிலிருந்து தொடங்குகிறது. இன்று நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடி பட்வா, உகாதி, நவ்ரேஜ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் தனது நூறு ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறது. இந்த சிறப்பான நாளில் ஸ்மிருதி மந்திருக்கு செல்லும், டாக்டர் சாகேப் மற்றும் குருஜிக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
டாக்டரும் குருஜியும் நாட்டுக்கு புதிய ஆற்றலைக் கொடுத்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட சித்தாந்தத்தின் விதை, இன்று உலகின் முன்பு பெரிய விருட்சமாக வளர்ந்துள்ளது. கொள்கைகளும் மதிப்புகளும் இந்த மரத்திற்கு உயர்ந்த உயரத்தை கொடுத்துள்ளன. லட்சக்கணக்கான கரசேவகர்களே அதன் கிளைகள். இது சாதாரணமான மரமல்ல, இது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று தெரிவித்தார்
அதேபோல் தீக்ஷா பூமி சென்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டு நாம் நமது அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை அடைகிறோம். அடுத்த மாதம் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள் வருகிறது. இன்று நான் தீக்ஷா பூமிக்குச் சென்று பாபாசாகேப்பை வணங்கி அவரின் ஆசீர்வாதத்தினை பெற்றேன். இந்த மகத்தான தலைவர்களை வணங்கி நவராத்திரி மற்றும் பிற விழாக்களுக்கு எனது வாழ்த்தினை நாட்டுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.