இந்தியா-இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள், அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர். அப்போது, மீனவப் பிரதிநிதி சகாயம் தலைமையிலானோர், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களுக்குப் பதில் அளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், “இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக் கூட்டம் விரைவில் நடைபெறும். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.