‘என்டிஏ கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்’ – நிதிஷ் குமார்

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன். மீண்டும் இந்த தவறு நடக்காது என பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை உறுதி செய்தார் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்.

பிஹார் மாநிலத்துக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இங்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் பேசியதாவது: அமித் ஷாவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களால் பிஹார் பயனடைந்துள்ளது, மேலும் இவை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உதவியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன். மீண்டும் இந்தத் தவறு நடக்காது

முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் (ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி) என்ன செய்தார்கள்? அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றனர், ஆனால் சமூகங்களுக்கு இடையிலான மோதல்களை ஒருபோதும் நிறுத்த முடியவில்லை. பிஹாரரில் பெயருக்குத் தகுந்த சுகாதாரப் பராமரிப்பு இல்லை. நல்ல கல்வி வசதி இல்லை.

ஜேடியு-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90-களின் நடுப்பகுதியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014-ல் பிரிந்தோம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022-ம் ஆண்டில், மீண்டும் பிரிந்தோம், இருப்பினும், கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் ஒரு முறை மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். பாஜகவுடனான முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.” என்றார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா, 2025 பிஹார் சட்ட மன்ற தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்றும் அறிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.