ஏடிஎம் சேவை கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஏடிஎம் சேவை கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் மையங்களில் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை சேவைகளுக்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி அல்லாமல் மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து ரூ.19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்மில் மாதம்தோறும் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். 5 முறைக்கு பிறகும் பணம் எடுத்தால், அதற்கான கட்டணம் ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது: ‘அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள்’ என்று மத்திய அரசு சொன்னது. பிறகு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று கூறி அபராதம் விதித்தார்கள்.

தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவை தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.23 வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் என்ன ஆகும். தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக, ஏழைகளுக்கும் வங்கி சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

ஏற்கெனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலை திட்ட பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவன மயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏடிஎம் அட்டையை தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.