உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கடந்த 27 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடை அருகே ஒரு கும்பலால் படுகொலை செய்ய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.
முத்துக்குமாரின் நண்பர் ராஜாராம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இக்கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியை துரிதப்படுத்திய மதுரை மாவட்ட போலீசார், நேற்று தேனி மாவட்டத்தில் குற்றவாளி பொன்வண்ணன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். படுகாயமடைந்த பொன்வண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன் கைது செய்யப்பட்ட தேனியைச் சேர்ந்த பாஸ்கரன், பிரபாகரன், சிவனேஷ்வரன் ஆகியோரை இன்று உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், மூவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மூவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

குற்றவாளிகளைப் பிடிக்காமல் உடலை வாங்க மாட்டோம் என்று தொடர் போராட்டம் நடத்தி வந்த போலீஸ்காரர் முத்துக்குமாரின் உறவினர்கள், பேச்சு வார்த்தைக்குப்பின் நேற்று உடலைப் பெற்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுசென்றனர். அங்கு காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டன.