மதுரை: குற்றச் செயல்களில் மதுரை முதன்மை மாவட்டமாக திகழ்வது வேதனை அளிக்கிறது என மேலூர் அருகே நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுரை ஆட்சியர் சங்கீதா ஆதங்கம் தெரிவித்தார்.
மதுரை மேலூர் பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாவட்ட காவல்துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் கிளையூரில் நடந்தது. சமூக நீதி மனித உரிமை பிரிவு காவல் பிரிவு எஸ்ஐ கிருஷ்ணபாண்டி வரவேற்றார். காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், “கல்வியிலும், வரலாற்றிலும் உலகிற்கு வழிகாட்டியாக திகழ்கிறோம். தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களில் மதுரை முதன்மை மாவட்டமாக இருப்பது வேதனையளிக்கிறது. பெற்றோர் தங்களது குழந்தைகளின் செயல்களை கண்காணிக்க வேண்டும். தீண்டாமை மற்றும் போதைப் பொருள் பயன்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே முழுமையாக தடுக்க முடியும். தற்போதைய காலத்தில் அது அவசியம் தேவை.” என்றார்.
தொடர்ந்து சமபந்தி விருந்தில் ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, கலால்பிரிவு உதவி ஆணையர் ராஜகுரு, மேலூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.