டேராடூன்: சக மாணவர் ஒருவரை கண்ணாடி பாட்டில்களால் தாக்கியதாக ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியிலுள்ள ஐஐடி-யில் படித்து வருபவர் அஜித்குமார் கேஷ்ரி(23). இவர் ஜார்க்கண்டை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி அஜித் குமாரை, அதே ஐஐடி-யில் படிக்கும் 5 பேர் சேர்ந்து கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளனர். முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதுதொடர்பாக அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை என்றும், ஐஐடி-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் ரூர்க்கி ஐஐடி அதிகாரி நரேந்திர பந்த் தெரிவித்துள்ளார்.