தாய்ப்பாலுக்கு நிகரான உணவு ஏதும் இல்லை என்று கூறிவரும் நிலையில், அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
கர்ப்ப காலத்தைப் போலவே இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நிறுவனம் உண்மையான தாய்ப்பாலில் இருந்துதான் இந்த ஐஸ்கிரீமை வழங்குகிறதா என்று கேட்டால் இல்லை, தாய்ப்பாலுக்கு நிகரான சுவையில் தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை இந்த ஐஸ்கிரீமில் கொண்டுவரப் போகிறது.

இந்த ஐஸ்கிரீம் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து, நெட்டிசன்கள் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவு வைரலானதை எடுத்து, பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி, அதாவது முட்டாள்கள் தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்று ஒரு பயனர் கூறுகிறார்.
மற்றொருவரோ பசும் பாலில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பின்பு ஏன் தாய்ப்பால் சுவையில் தயாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பு உள்ளார்.
இதற்கிடையில், “பொதுமக்களிடம் இதன் தேவை இருக்கிறது” என்று அந்த நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.