நாக்பூர்: பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அங்குள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரதமரின் இந்த நாக்பூர் வகையின் போது, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாவத், சங்கத்தின் முன்னாள் பொதுச்செலாளர் சுரேஷ் பைய்யாஜி, மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆகியோர் உடன் இருந்தனர். இதில் பட்னாவிஸும், நிதின் கட்கரியும் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு ஸ்ம்ருதி பவனில் உள்ள அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அங்கிருந்த குறிப்பு புத்தகத்தில் இந்தியில் பதிவு எழுதிய பிரதமர் மோடி, “இந்த நினைவுச் சின்னங்கள் இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ்-ன் இரண்டு பெரிய வலுவான தூண்களின் இந்த நினைவுச்சின்னம், தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கான சுவயம்சேவகர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.
பரம பூஜனியா டாக்டர் ஹெட்கேவர் மற்றும் பூஜிய குருஜியின் நினைவுகளைப் போற்றும் இந்த ஸ்ம்ருதி மந்திருக்கு வருகை தந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் நாக்பூர் வருகை, இந்து புத்தாண்டின் தொடக்கமான குடி பத்வாவைக் குறிக்கும் வகையிலான ஆர்எஸ்எஸின் பிரதிபாடா நிகழ்ச்சியுடன் இணைந்து நடந்துள்ளது.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்பு ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் நினைவிடத்துக்கு வருகை தருவது இதுவே முதல்முறை. முன்னதாக கடந்த 2000, ஆகஸ்ட் 27ம் தேதி, அப்போது பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் டாக்டர் ஹெட்கேவார் நினைவிடத்துக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 1956ம் ஆண்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தனது ஆதரவாளர்களுடன் பவுத்த மதத்தைத் தழுவிய தீக்ஷா பூமிக்கும் பிரதமர் மோடி சென்றார். முன்னதாக விமானநிலையம் வந்த பிரதமர் மோடியை மாநில முதல்வர் பட்னாவிஸ், மத்திய அமைச்சர் கட்கரி, மாநில பாஜக தலைவர் சந்த்ரசேகர் பவன்குலே ஆகியோர் வரவேற்றனர்.