லாகூர்,
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் மீது பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் பயணிகள் ரெயிலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடத்தினர்.
இதையடுத்து, விரைந்து செயல்பட்ட பாதுகாப்புப்படையினர், கிளர்ச்சியாளர்களை சுட்டு வீழ்த்தி ரெயிலில் பணய கைதிகளாக இருந்த பயணிகளை மீட்டனர். மேலும், பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேவேளை, பாகிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் மர்டன் மாவட்டம் கட்லங் மலைப்பகுதியில் நேற்று இரவு ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சிலர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.