பிரதமர் மோடி அரசின் முயற்சிகளால் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10,000 இந்தியர்கள் விடுதலை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை மற்றும் உயர்நிலை தலையீடுகள் மூலம் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்று பத்திரமாக நாடு திரும்புவதை உறுதி செய்துள்ளது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்திய கைதிகள் 500 பேருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது. யுஏஇ அரசின் இந்த முடிவு, யுஏஇ – இந்தியா இடையிலான நெருக்கமான ராஜந்திர உறவை நிரூபிக்கிறது.

இந்த வெற்றிகரமான முயற்சிகள் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ராஜதந்திர அந்தஸ்தையும், வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பதில் மோடி அரசின் இடைவிடாத அர்ப்பணிப்பையும் காட்டுகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: பிரதமர் மோடி அரசின் ராஜந்திர முயற்சியால் இந்திய குடிமக்கள் விடுவிக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் வருமாறு: கடந்த 2022 முதல் யுஏஇ நாட்டில் இருந்து 2,783 இந்திய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2019-ல் தனது இந்திய பயணத்தின்போது 850 இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

2023-ல் கத்தாரில் இருந்து இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஈரான் அரசு கடந்த 2024-ல் 77 இந்தியர்களையும், 2023-ல் 12 மீனவர்கள் உள்ளிட்ட 43 இந்தியர்களையும் விடுவித்தது.

2019-ல் பிரதமர் மோடியின் வருகையின் போது பஹ்ரைன் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கியது. 2017-ல் குவைத் அமீர் 22 இந்தியர்களை விடுவித்தார். 97 பேருக்கு தண்டனைகளை குறைத்தார்.

மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக இலங்கை அரசு கடந்த 2014 முதல் 3,697 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இதுபோல் பாகிஸ்தான் கடந்த 2014 முதல் 2,638 இந்திய மீனவர்களையும் 71 இந்திய கைதிகளையும் விடுதலை செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.