மும்பை,
பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ள நாக்பூருக்கு இன்று வருகை தருகிறார். இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று நாக்பூருக்கு வரும் பிரதமர் மோடி, ரெசிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திர் பகுதிக்கு சென்று அங்கு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இதேபோல சட்டமேதை அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீக்சபூமிக்கு சென்று, அங்கு அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறார். மாதவ் நேத்ராலயா கண் ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்க கட்டிடமான மாதவ் நேத்ராலயா பிரீமியத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது 2014-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு முதன்மையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் சிகிச்சை ஆஸ்பத்திரி ஆகும். ஆர்.எஸ்.எஸ். 2-வது தலைவர் கோல்வால்கரின் நினைவாக இந்த ஆஸ்பத்திரி நிறுவப்பட்டது.
புதிய விரிவாக்க கட்டிடத்தில் 250 படுக்கைகள், 14 வெளிநோயாளிகள் பிரிவுகள் மற்றும் 14 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை இருக்கும். இதன்மூலம் மக்களுக்கு மலிவு விலையில், உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட உள்ளது. இதேபோல பிரதமர் மோடி “சோலார் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட்” நிறுவனத்தையும் பார்வையிடுவார். இங்கு ஆயுதம் ஏந்தாத வான்வழி வாகனங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டர் நீளம் மற்றும் 25 மீட்டர் அகலம் கொண்ட விமான ஓடுதளத்தையும் திறந்து வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.