மியான்மர் பூகம்பம்: தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் நிலை என்ன?

நேப்பிடா: மியான்மர் பூகம்பத்தால் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் நிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த 6 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அரக்கான் படை என்ற கிளர்ச்சிப் படை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் மியான்மரின் 50 சதவீத பகுதிகள் மட்டுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத பகுதிகளை அரக்கான் படை நிர்வகித்து வருகிறது. இருதரப்பும் இடையே தீவிரமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்திய வம்சாவளியினர் நிலை என்ன? – ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மியான்மரில் (பர்மா) குடியேறினர். இதில் 60 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவர். கடந்த 1948-ம் ஆண்டில் மியான்மர் விடுதலை அடைந்தது. கடந்த 1960-64-ம் ஆண்டுகளில் அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள், தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்தினர். அப்போது ஏராளமானோர் இந்தியா திரும்பினர்.

தற்போதைய சூழலில் தமிழர்கள் உட்பட சுமார் 25 லட்சம் இந்தியர்கள் மியான்மரில் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அவர்கள் ரங்கூன், மண்டலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

மியான்மரின் மண்டலை மாகாணம் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் வீடு, உடைமைகளை இழந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, ‘ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது’ என்று சர்வதேச ஊடகங்களிடம் மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்துள்ள தகவல்களும் அச்சங்களைக் கூட்டியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.