மியான்மர் பூகம்பம்: 10,000 பேர் இறந்ததாக அச்சம் வலுப்பது ஏன்?

நேப்பிடா: மியான்மர் பூகம்பத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.

மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் சமீபத்திய செய்திக் குறிப்பில், ‘நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்துள்ளனர். 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேரை இதுவரை காணவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன. ‘ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது.

தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் பகுதிகளுக்கு மட்டுமே சர்வதேச மீட்பு படை வீரர்கள் சென்றுள்ளனர். ‘அரக்கான்’ படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. அந்த படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை’ என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல், ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என மியான்மரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள், பணியாளர்கள் கருதுகின்றனர். பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்ததாலும், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் மியான்மர் ராணுவ நிர்வாகம் திணறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மியான்மரில் நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான போதுமான மருந்துகள் அங்கு இல்லாததால் பாதிப்பு மிகவும் மோசமடையக் கூடும் என ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில், மியான்மரில் பூகம்ப பலி எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தாய்லாந்து நிலை என்ன? – மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்ட 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங்கியது. பாங்காக் உட்பட 10 பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. தாய்லாந்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர்; 83 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த 6 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.

மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அரக்கான் படை என்ற கிளர்ச்சிப் படை ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய சூழலில் மியான்மரின் 50 சதவீத பகுதிகள் மட்டுமே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத பகுதிகளை அரக்கான் படை நிர்வகித்து வருகிறது. இருதரப்பும் இடையே தீவிரமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக மியான்மரின் ராணுவ நிர்வாகம், வெளிநாடுகளின் உதவியை கோருவது கிடையாது. நிலநடுக்க பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதால் முதல்முறையாக மியான்மர் ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹலாங், சர்வதேச நாடுகளிடம் பகிரங்கமாக உதவி கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.