மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் அடித்தது. இதனை எதிர்த்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த சீசனில் குஜராத் அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். முதலில் இன்னிங்சில் மும்பை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்
ஐபிஎல் நிர்வாகம் விளக்கம்
“அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான டாடா இந்தியன் பிரீமியர் லீக்கின் 9வது போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ், குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்களுடன் தொடர்புடைய, இந்த சீசனில் அவரது அணியின் முதல் மீறல் இதுவாக இருந்ததால், ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே காரணத்திற்காக முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. கடந்த சீசனில் கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய முதல் போட்டிலேயே அதைத் தவறு மீண்டும் நடந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டிலிருந்து கேப்டனுக்கு தடை விதிக்கப்படும் என்ற விதி நீக்கப்பட்டது, அதற்கு பதிலாக புள்ளிகள் குறைக்கப்படும் அல்லது அபராதங்கள் விதிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டியில் இதே தவறை செய்தால் இந்த அபராத தொகை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டியில் விளையாடி, இரண்டிலுமே தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 31ஆம் தேதி மும்பையில் விளையாட உள்ளனர். இந்த சீசனில் தங்களது ஹோம் கிரவுண்டில் முதல் முறையாக விளையாடுவதால் இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?