முதல் வெற்றிக்கு… மும்பை அணி பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதுதான்!

IPL 2025, MI vs KKR: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. மாலையில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விசாகப்பட்டினத்திலும், இரவில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கௌகாத்தியிலும் மோதுகின்றன.

MI vs KKR: வான்கடேவில் வாய்ப்பு யாருக்கு…?

இவை ஒருபுறம் இருக்க, தொடர்ந்து இரண்டு தோல்விகளை அடைந்திருக்கும் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (மார்ச் 31) அதன் ஹோம் மைதானமான வான்கேடவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஹோம் மைதானத்திலாவது மும்பை அணி, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா என அதன் ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.

மும்பை அணி சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது. மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோ ஆர்சிபியிடம் தோல்வியடைந்தாலும், அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று அதன் புள்ளிக் கணக்கை தொடங்கியிருக்கிறது. அப்படியிருக்க கேகேஆர் அணி அதன் வெற்றிப் பயணத்தை தொடர விரும்பும். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.

MI vs KKR: அணிக்கு திரும்பும் சுனில் நரைன்

கடந்த போட்டியை சுனில் நரைன் தவறவிட்டார். ஆனால், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் விளையாடுவார் என கூறப்படுகிறது. டி காக் – சுனில் நரைன் ஓபனிங்கில் இறங்குவார்கள். ரஹானே, ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆன்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். ஸ்பென்சர் ஜான்சன் கடந்த 2 போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் அவருக்கு பதில் ஆன்ரிச் நோர்க்கியாவை சேர்க்கலாம். அவர் வந்தால் பேட்டிங்கை போல பந்துவீச்சும் மேலும் பலப்படும்.

MI vs KKR: கேகேஆர் அணிக்கு பிரச்னையே இல்லை…

வான்கடே மைதானத்தில் பந்தை ஸ்விங் செய்வதற்கு அரோரா, நோர்க்கியா இருவரும் கைக்கொடுப்பார்கள். அரோரா, வருண் ஆகியோர் தலா ஒரு ஓவரை பவர்பிளேவில் போடலாம். டெத் ஓவர்களில் ஹர்ஷித் ராணா, ரஸ்ஸல், நோர்க்கியா கைக்கொடுப்பார்கள். சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி மிடில் ஓவர்களில் மும்பை பேட்டர்களை அச்சுறுத்துவார்கள். இதில் டி காக், ரஹானேவுக்கு மும்பை ஆடுகளம் குறித்த புரிதல் அதிகம். பந்து ஸ்விங் ஆனால் சுனில் நரைன் பேட்டிங்கில் திணற வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரும் நாளை சிறப்பாக இருந்தால் கேகேஆர் அணிக்கு எவ்வித பிரச்னையுமே இருக்காது.

MI vs KKR: மும்பை அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிவிட்டார். ஆனால் பும்ரா எப்போது அணிக்கு திரும்புவார் என இதுவரை உறுதியாக தெரியவில்லை. அப்படியிருக்க மும்பை அணி கடந்த போட்டியில் இருந்து சில மாற்றங்களை பிளேயிங் லெவனில் செய்தாக வேண்டும். முஜீப் உர் ரஹ்மானுக்கு பதில் வில் ஜாக்ஸை பிளேயிங் லெவனில் வைக்கலாம். இதனால் பேட்டிங் சற்று நீளும். வில் ஜாக்ஸ் பவர்பிளேவில் கூட விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.

விக்னேஷ் புதூரை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வில் ஜாக்ஸ் பேட்டிங்கிற்கு வருவதால் ராபின் மின்ஸிற்கு பதில் கூட விக்னேஷ் புத்தூரை கொண்டுவரலாம். வேறு மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ரோஹித் – ரிக்கில்டன் ஜோடி மிரட்டலான தொடக்கத்தை அளித்தால் மட்டுமே மும்பை அணியால் சிறப்பான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் ஆர்டரில் அனுபவமின்மை குறைவாக தெரிவதால் வில் ஜாக்ஸ் நம்பர் 4இல் வருவது அவசியம். திலக் வர்மா நம்பர் 5இல் கூட விளையாடலாம்.

MI vs KKR: பிளேயிங் லெவன் கணிப்பு

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கில்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சஹார், டிரென்ட் போல்ட், சத்யநாராயண ராஜூ. இம்பாக்ட் வீரர்: விக்னேஷ் புத்தூர்/கரன் சர்மா

கொல்கத்தா நைடர்ஸ்: சுனில் நரைன், குயின்டன் டி காக், அஜிங்கயா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரகுவன்ஷி, ரின்கு சிங், ஆன்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா. இம்பாக்ட் வீரர்: ஆன்ரிச் நோர்க்கியா/ஸ்பென்சர் ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.