புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 120-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் மோடி பேசும்போது, கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில், 1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு தண்ணீர் சேமிப்பு நடந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள், குளங்கள் மற்றும் பிற தண்ணீர் தேக்க கட்டமைப்புகளின் வழியே இது சாத்தியப்பட்டு உள்ளது.
1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு தண்ணீர் என்றால் எவ்வளவு? என நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்பட்டு போவீர்கள். கோவிந்த் சாகர் ஏரியில், 900 முதல் 1,000 கன மீட்டர் அளவுக்கு மேல் நீர் தேக்க முடியாது என்றால் பார்த்து கொள்ளுங்கள் என கூறி, தண்ணீர் சேமிப்பு பற்றி அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று யோகா தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். யோகா தினத்திற்கு 100-க்கும் குறைவான நாட்களே உள்ளன. உங்களுடைய வாழ்வில் யோகாவை நீங்கள் மேற்கொள்ளவில்லை என்றால், உடனே செய்யுங்கள். இன்னும் காலம் கடந்து விடவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பு, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தற்போது இந்த தினம் ஆனது, யோகாவின் பிரமாண்ட திருவிழாவாக உருப்பெற்று விட்டது என்றார்.
ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்பதே, 2025-ம் ஆண்டுக்கான யோகா தின கருப்பொருளாக உள்ளது. யோகாவின் வழியே, ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் பேசியுள்ளார்.
நம்முடைய திருவிழாக்கள் நாட்டில், பன்முக தன்மையில் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன என கூறிய அவர், பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறையை தங்களுடைய திறனை மெருகேற்றி கொள்வதற்கும், புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.