சண்டிகர்: ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கில் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் 17 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008-ல் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிர்மல்ஜித் கவுர் என்பவரின் வீட்டில் ரூ.15 லட்சம் டெலிவரி செய்யப்பட்டது. நீதிபதி நிர்மல்ஜித் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தார். இது தொடர்பாக சண்டிகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் பிறகு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
விசாரணைக்கு பிறகு, “இந்தப் பணம் பஞ்சாப், ஹரியானா நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக கொண்டு வரப்பட்டது. ஆனால் தவறுதலாக நிர்மல்ஜித் கவுரிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 2007-ல் சொத்து வழக்கில் சஞ்சீவ் பன்சல் என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதற்கான லஞ்சப் பணம் இது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் நீதிபதி நிர்மல் யாதவ் விடுப்பில் சென்றார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பதவியில் இருக்கும் நீதிபதி மீதான லஞ்ச வழக்கு இது என்பதால் அப்போது இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு சண்டிகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி நிர்மல் யாதவை வழக்கில் இருந்து விடுவித்தது.
சண்டிகர் நீதிமன்றத்துக்கு வெளியில் நேற்று நிர்மல் யாதவ் கூறுகையில், “நாட்டின் நீதிமன்ற அமப்பு மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார்.