இம்பாலா: மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல் நிலைய எல்லைகளை தவிர்த்து மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணிப்பூர் மாநிலத்தில் 13 காவல்நிலைய எல்லைப் பகுதிகளைத் தவிர, மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தின் திராப், சங்லாங் மற்றும் லாங்டிங் ஆகிய மாவட்டங்களுக்கும், மாநிலத்தின் மூன்று காவல் நிலைய எல்லைப் பகுதிகளுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்புச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 1980-களின் தொடக்கத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் தொந்தரவு நிறைந்த அல்லது கலவரப் பதற்றம் உள்ள பகுதிகளில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க பாதுகாப்பு படைகளைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது. கடந்த 2023 மே மாதம் வடகிழக்கு மாநிலத்தில் குகி பழங்குடிகளுக்கும், மைத்தேயி பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாகி மாநிலம் முழுவது பரவியது. இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் கலவரத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு மாநிலத்தில் பாஜக அரசு முதல்வர் பிரேன் என் சிங் தனது முதல்வர் பதவியை கடந்த பிப்.13-ம் தேதி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மாநிலத்தில் மலைப் பிராந்தியம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடங்களில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர். இதுகுறித்து இம்பால் போலீஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சுரத்சந்த்பூர் மாவட்டத்தின், சுரத்சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்ஜிங் மலைகாட்டுப் பகுதியில் இருந்து, ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஒரு போல்ட் ஆக்ஷன் துப்பாக்கி, 22 கைத்துப்பாக்கி, பாம்பி 6 அடி, பாம்பி 5 அடி, பாம்பி 4 அடி கொண்ட மூன்று நாட்டு மோர்டார், ஒரு நாட்டுவெடிகுண்டு, ஒரு ஹெல்மெட், ஒரு வயர்லஸ் செட், ஒரு வயர்லஸ் செட் சார்ஜர், ஒரு எச்இ குண்டு, 500 கிராம் வெடிகுண்டு பவுடர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.