ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ̀எல் 2: எம்புரான்’. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடதக்கது. திரையரங்குகளில் அதிரடியான வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் எம்புரான் திரைப்படத்திற்கு தற்போது சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

படத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரம் தொடர்பான காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜாராத் கலவர சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளையும் தலைவர்களுக்கும் இழிவுப்படுத்தும் கருத்துகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. படத்திற்கு எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் மன்னிப்பு கோரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், “ஒரு கலைஞனாக என்னுடைய எந்த ஒரு திரைப்படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதக் குழுவிற்கும் விரோதமானதாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது என் கடமை. ஆகையால், நானும் எம்புரான் குழுவினரும் என் அன்பிற்குரியவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்துக்கு மனம் வருந்துகிறோம். மேலும் அதற்கான பொறுப்பு படத்தின் பின்னணியில் பணியாற்றிய அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து, சர்ச்சைக்குரிய கருப்பொருட்களை படத்திலிருந்து நீக்குவது என எல்லோரும் இணைந்து முடிவு செய்துள்ளோம்.” எனப் பதிவிட்டிருந்தார். படத்திற்கு எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து மொத்தமாக 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

கலவரக் காட்சிகளில்தான் இந்தக் கட்களைக் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டிருக்கிறது. படத்தின் காட்சிகள் எவரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என நேற்றைய தினம் இப்படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் கூறியிருந்தார். படத்தின் கன்டென்ட் பாதிக்கப்படாத வண்ணம் மறு தணிக்கை செய்யப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமையிலிருந்து திரையரங்குகளில் ஒளிபரப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் படத்தில் முல்லைப் பெரியாறு தொடர்பான காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை நீக்காவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.