Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" – பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வகுப்புவாத வன்முறை சார்ந்த காட்சிகள், 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மோகன்லால் இது தொடர்பாக மன்னிப்புக் கேட்கவுள்ளதாக மலையாள இயக்குநரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான மேஜர் ரவி தெரிவித்துள்ளார்.

படத்தின் டிஸ்கிளைமரில் அனைத்துக் காட்சிகளும் கற்பனையானவை எனக் கூறப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட கலவரம் சார்ந்த காட்சிகள், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸை இழிவுபடுத்துவதாக வலதுசாரி ஆதரவாளர்கள் திரைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எம்புரான்

எம்புரான் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் இந்த பிரச்னை பெரிதாக வளர்ந்தது. திரைப்படக் குழுவினர் தாமாக முன்வந்து படத்தில் சில காட்சிகளை நீக்குவதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் வில்லனின் பெயரையும் மாற்றுவதாகக் கூறப்படுகிறது.

மார்ச் 29ம் தேதி மேஜர் ரவி சமூக வலைதளங்களில் எம்புரான் படத்தின் மீதான விமர்சனங்கள் பற்றி பேசினார். இதற்கு முன்பு சிலர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கௌரவ லேப்டினன்ட் கர்னல் பட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் இன்னும் Empuraan பார்க்கவில்லை

மேஜர் ரவி பேசியதாவது, “ராணுவத்தில் உள்ள எனது நண்பர்களிடமிருந்து எனக்கு பல அழைப்புகள் வந்தன, அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் மோகன்லாலின் லெப்டினன்ட் கர்னல் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

மோகன்லாலின் பதவியை இந்த பிரச்னையுடன் இணைக்க வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.” எனக் கூறியுள்ளார்.

ரவி, மோகன்லால்

மோகன்லாலுக்கு ஆதரவாக, “அவர் கதையில் குறுக்கிடுவதே இல்லை. ஒருமுறை கதை கேட்பதுடன் சரி, அதில் எந்த மாற்றமும் வேண்டுமெனக் கேட்கமாட்டார். அவர் எம்புரான் படத்தை இன்னும் பார்க்காமல் இருக்கலாம், ஏனென்றால் கீர்த்தி சக்ரா படத்தையும் அவர் ரிலீஸுக்கு முன்பு பார்க்கவில்லை. இந்த சர்ச்சையால் அவர் மிகவும் வேதனையடைந்துள்ளார். நீங்கள் நான் கூறுவதை நம்ப வேண்டும்” என்றும் பேசியுள்ளார் ரவி.

மேலும் ரவி படத்தில் 26 காட்சிகள் ஏற்கெனவே நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். “மோகன்லால் ஏதாவது செய்திருந்தால் அதனை அவர் நியாயப்படுத்த வேண்டும். ஆனால் படத்தில் உண்மையான பிரச்னை அவர் வருவதற்கு முன்பே நிகழ்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ் மீது விமர்சனம்

நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜையும் (மேஜர் ரவியின் ராணுவ படத்தில் நடித்துள்ளார்) நடிகரும் கதாசிரியருமான முரளி கோபியையும் தீவிரமாக விமர்சித்துள்ளார் மேஜர் ரவி.

பிரித்விராஜ் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை அதிக கவனத்துடன் கையாண்டிருக்க வேண்டும் என்றும், முரளி கோபி இதனை ஆரம்பத்தில் இருந்தே சித்தரித்திருக்க வேண்டும் என்றும் ரவி கூறியுள்ளார்.

“முரளி என் நண்பர். ஆனால் அவர் ஆரம்பத்திலிருந்து முழு சம்பவத்தையும் சித்தரித்திருக்க வேண்டும். எப்படி ஒரு வாகனம் 52 பேருடன் எரிக்கப்பட்டது என்பதைக் காட்டியிருக்க வேண்டும். அதுக் காட்டப்பட்டிருந்தால், இந்த சர்ச்சை எழுந்திருக்காது. இந்து-முஸ்லீம் வன்முறையை மட்டும் தேர்ந்தெடுத்து சித்தரிப்பது வகுப்புவாதம், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் மேஜர் ரவி.

எம்புரானின் தொடக்கக் காட்சிகள் ஒரு ரயிலில் தீப்பிடிப்பதையும், பெண்கள், குழந்தைகள், சந்நியாசிகள் உள்ளிட்ட பயணிகள் எரிந்து மரணிப்பதையும் ஒரு சோகப்பாடலின் பின்னணியில் காட்சிபடுத்தியிருக்கின்றனர். ஆனால், தீ எப்படிப் பற்றியது என்பதைக் காட்சிபடுத்தாதற்கு வலதுசாரி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது ஒரு விபத்து போன்று இருப்பதாகக் கூறியுள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைகளில் இருப்பதாகக் கூறப்படும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் இந்தப் படம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால், திரைப்பட சான்றிதழ் வாரியத்திலிருந்து அந்த உறுப்பினர்கள் நீக்கப்பட வேண்டும் என மேஜர் ரவி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.