கோடைக்காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் சார்ந்து ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு.

“கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் சுரக்கும். அதனால் எண்ணெய்ப்பசையும் அதிகமாகும். வியர்க்குரு ஏற்படும். இந்த நாள்களில் இரு வேளை குளிப்பது அவசியம். இரண்டு வேளையும் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டுமே தவிர வெந்நீரில் குளிக்கக் கூடாது. பெண்கள் லெக்கிங்ஸ் மற்றும் ஆண்கள் ஜீன்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பனியன் மெட்டீரியலைக் கூடத் தவிர்த்துவிட்டு காட்டன் உடுத்த வேண்டும். காட்டனுக்குத்தான் வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்கிறது.
சருமத்துக்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். எஸ்.பி.எஃப் 30-க்கு மேல் உள்ள சன் ஸ்கிரீனாக பார்த்து வாங்க வேண்டும். பரு இருந்தால் க்ரீம் வடிவிலான சன் ஸ்கிரீனைவிட ஜெல் வடிவிலான சன் ஸ்கிரீன் பயன் படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் போட்டுவிட்டால் எப்படி வேண்டுமானாலும் வெயிலில் உலவலாம் என்று நினைத்து விடக்கூடாது. சன் ஸ்கிரீன் என்பது 30 சதவிகிதம் மட்டுமே பாதுகாப்பு தரும் என்பதால் வெயிலில் வண்டி ஓட்டிக்கொண்டு வெளியே செல்கிறவர்கள் கிளவுஸ் அணிய வேண்டும். முகத்தில் கண் தவிர மற்ற பகுதிகளிலெல்லாம் துப்பட்டாவால் சுற்றிச் செல்லும் பழக்கம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. அது இந்த சீசனுக்கு மிகவும் நல்லது. வெயிலில் வெளியே தெரியும் கைகள் மற்றும் முகத்தை ஏதாவது வகையில் மூடிக்கொள்வதன் வழியே சூரியனின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

கோடையில் படர்தாமரை அதிகமாகும். அக்குள் மற்றும் தொடையிடுக்குகளில் பூஞ்சைத்தொற்று அதிகமாக ஏற்படும். அந்த இடங்களில் காட்டன் டவலால் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். மென்மையான காட்டன் டவலையே பயன்படுத்த வேண்டும். அவசரமாகக் குளித்து விட்டுக் கிளம்புபவர்கள் நன்றாகத் துடைக்காமல் ஈரத்திலேயே துணி உடுத்துவார்கள். இந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். உடலில் ஈரம் இல்லாது உலர்ந்த பிறகுதான் உடை மாற்ற வேண்டும்.
ஷூ பயன்படுத்துகிறவர்கள் தினமும் சாக்ஸை துவைத்தே பயன்படுத்த வேண்டும். படர்தாமரை இருக்கிறவர்கள் குளிக்காமல் இறுக்கமான ஆடைகளை அணியும்போது வியர்வை பட்டு அது மேலும் அதிகமாகி விடும். அதேபோல சொறிவதன் மூலமும் அது பெருகும். கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் தவறுதான். சொறிவதன் மூலம் அதிகம் பரவும் என்பதால் அதற்கான பவுடர் மற்றும் லோஷன் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அதற்கும் கேட்கவில்லையென்றால் சரும மருத்துவரை அணுக வேண்டும்.

வெயில் நாள்களில் அரிப்பும் பலருக்கு பிரச்னையாக இருக்கும். அரிப்பிலேயே பல வகைகள் இருக்கின்றன. ‘பாலிமார்பிக் லைட் எரப்ஷன்’ (Polymorphic light eruption) என்கிற ஒவ்வாமை கோடைக்காலத்தில் அதிகம் ஏற்படும். சிறு வயதிலிருந்தே வெயில்பட்டு வளர்வதால் முகம், கழுத்து, கைகள் உள்ளிட்டவை வெயிலைத் தாங்கும் தன்மை கொண்டிருக்கும். அந்தத் தன்மை இல்லாமல் போவதே இப்பிரச்னைக்கான காரணம். இந்த ஒவ்வாமை உள்ளவர்களால் ஐந்து நிமிடங்கள்கூட வெயிலில் நிற்க முடியாது. அவர்கள் வெயிலில் நடமாடுவதை முழுவதுமே தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலான வெயிலை உள்வாங்கவே கூடாது. சூரிய ஒளி மிகவும் நல்லது, அதிலிருந்துதான் வைட்டமின் டி கிடைக்கிறது என்று சொல்வதெல்லாம் காலை இளம் வெயிலுக்குத்தான் பொருந்தும். உச்சிவெயிலில் நின்று கொண்டு சூரிய ஒளியை உள்வாங்குவதால் பாதிப்புகள்தான் ஏற்படும். எனவே, காலை 8 மணி வரை அல்லது மாலை 4 மணிக்கு மேல் வெயிலில் நிற்பதுதான் நல்லது.
கோடையில் வியர்வை, எண்ணெய்ப் பசையின் காரணமாக முடி அதிகம் கொட்டும். தினசரி தலைக்குக் குளிப்பது நல்லது. இல்லையென்றால் வாரத்துக்கு மூன்று முறையேனும் தலைக்குக் குளிக்க வேண்டும். தலையின் ஈரம் காய நேரமெடுக்கும் என தினசரி தலைக் குளியலைத் தவிர்க்க நினைப்போர், தினசரி அரை மணி நேரம் முன்னதாகவே தயாராகிக் குளித்துவிட்டு தலையைக் காய வைக்க அரை மணி நேரத்தை ஒதுக்கலாம். இதனால் தலையில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்கி விடும்.

வெயில் காலத்தில் சிலருக்கு வேனல் கட்டி வரும். இது உடல் சூடாவதால் ஏற்படுவதல்ல. கோடைக்காலத் தொற்றின் காரணமாக ஏற்படுவது. வெயில் காலத்தில் வருவதால் அதனை சூட்டுக்கட்டி என்கிறார்கள். நீர்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் வேனல் கட்டிகள் வராமல் தடுக்கலாம்’’ என்கிறார்.