கவுகாத்தி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கெய்க்வாட் 63 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ராஜஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிதிஷ் ராணா ஆட்ட நாயகன் விருது வென்றார். கடந்த போட்டிகளில் 4-வது வரிசையில் களமிறங்கிய அவர் இந்த போட்டியில் 3-வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் 3-வது இடத்தில் களமிறங்கியது பயிற்சியாளர்கள் எடுத்த முடிவு என்று நிதிஷ் ராணா கூறியுள்ளார்.
இது குறித்து போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:- “நான் புதிய பந்தை பயன்படுத்தி கொள்ள முயற்சித்தேன். பவர்பிளே முக்கியமானது. நான் பிட்ச் மற்றும் பந்துவீச்சாளரை பார்த்து விளையாடாமல் பீல்டிங்கை பார்த்து விளையாடினேன். பீல்டிங் அமைப்பை பொறுத்து நான் பந்து வீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்தி அடித்தேன். முந்தைய ஆட்டங்களில் நான் பந்தை மிகவும் கடினமாக அடிப்பதாக உணர்ந்தேன். அதை நான் இன்று மாற்றினேன்.
நான் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய வந்தது எங்கள் பயிற்சியாளர்களின் தந்திரோபாய நடவடிக்கை. நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். ராகுல் டிராவிட்டுக்கும் விக்ரம் ரத்தோருக்கும் இடையே ஓய்வறையில் ஒரு உரையாடல் நடந்தது. அதில்தான் இன்று நான் 3வது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று முடிவு செய்யப்பட்டது” என கூறினார்.