மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உள்ளே யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து சென்றுள்ள மீட்பு குழுவினர் ஒரு சில இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மியான்மரில் கோடை வெயில் 41 டிகிரி செல்சியஸாக உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் மியான்மரில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்களுக்குள் மேல் ஆவதால் கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் மியான்மர் மருத்துவமனையில் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தங்கியுள்ளனர். அவர்கள் உணவு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போராடி வருகின்றனர்.
மண்டாலே விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு வர்த்தக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை கொண்டு வரும் விமானங்கள் மட்டுமே அங்கு தரையிறங்க அனுமதிக்கப்படுகின்றன. இணைய சேவை மற்றும் போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.