புதுடெல்லி: மத்தியில் அதிகாரக் குவிப்பு (centralisation), வணிகமயமாக்கல் (commercialisation), வகுப்புவாதமயமாக்கல் (communalisation) ஆகிய மூன்றும் இந்தியக் கல்வி முறையை வேட்டையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
நமது நாட்டின் கல்வி முறை தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் விவரம்: இந்திய கல்வியை C-கள் வேட்டையாடுகின்றன. ஒன்று, கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் (centralisation) நடவடிக்கைகளை எடுப்பது, கல்வியை தனியார்மயமாக்குவது மற்றும் வணிகமயமாக்குவது (commercialisation), பாடப் புத்தகங்கள் மற்றும் நிறுவனங்களை வகுப்புவாதமயமாக்குவது (communalisation) ஆகியவற்றில்தான் நரேந்திர மோடி அரசு கவனம் செலுத்துகிறது. இந்த மூன்று C-கள் மூலம் இந்தியாவின் பொதுக் கல்வி வேட்டையாடப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசாங்கத்தின் செயல்பாட்டின் அடையாளமாக கட்டுப்பாடற்ற அதிகார மயமாக்கல் இருந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்களைக் கொண்ட மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (CABE) செப்டம்பர் 2019 முதல் கூட்டப்படவில்லை.
தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மூலம் கல்வியில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினாலும், இந்தக் கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசிப்பது கிடையாது. பொதுப் பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தில் கூட, தனது சொந்தக் குரலைத் தவிர வேறு எந்தக் குரலுக்கும் செவிசாய்க்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் மோசமான உறுதிப்பாட்டுக்கு இது ஒரு சான்றாகும்.
இந்த அரசாங்கத்தால் செய்யப்பட்ட மிகவும் அவமானகரமான செயல்களில் ஒன்று, சமக்ர சிக்ஷா அபியான் (SSA)-இன் கீழ் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை நிறுத்தி வைப்பது. இதன் மூலம், மாதிரிப் பள்ளிகளின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளை வற்புறுத்துவதும் அடங்கும்.
2025-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வரைவு வழிகாட்டுதல்கள் கடுமையாக உள்ளன. இது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் இருந்து மாநில அரசுகளை முழுமையாக விலக்கி வைத்துள்ளது. பல்கலைக்கழக வேந்தராக பொதுவாக நியமிக்கப்படும் ஆளுநர்கள் மூலம் மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு கிட்டத்தட்ட ஏகபோக அதிகாரமாக மாற்றிக்கொண்டுள்ளது.
இது பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்வதற்கான ஒரு பின் கதவு முயற்சியாகும். கூட்டாட்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக மத்திய அரசின் இந்த அணுகுமுறை உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்திய கல்வி முறையை வணிகமயமாக்கும் போக்கு முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நாட்டின் ஏழைகள் விலையுயர்ந்த மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பள்ளி அமைப்பின் கைகளில் சிக்கியுள்ளனர். உயர் கல்வியில், பல்கலைக்கழக மானியக் குழுவின் முந்தைய தொகுதி மானிய முறைக்கு மாற்றாக உயர்கல்வி நிதி நிறுவனத்தை (HEFA) அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மூன்றாவது முயற்சி வகுப்புவாதமயமாக்கல். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நீண்டகால சித்தாந்தத் திட்டத்தை பாடப்புத்தங்களில் கொண்டு வந்து, கல்வி முறை மூலம் வெறுப்பைப் போதித்து வளர்ப்பது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி பாடத்திட்டத்தின் முதுகெலும்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பாடப்புத்தகங்கள், வகுப்புவாத நோக்கத்துடன் திருத்தப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் முகலாய இந்தியா பற்றிய பிரிவுகள் பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நமது பல்கலைக்கழகங்களில், ஆட்சியாளர்களுக்கு உகந்த சித்தாந்த பின்னணியைச் சேர்ந்த பேராசிரியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் கற்பித்தல் தரம் மோசமானதாக இருந்த போதிலும், அத்தகையவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்களில் கூட “வளைந்து கொடுக்கும் சித்தாந்தவாதிகளுக்கே” தலைமைப் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த பத்தாண்டுகளில், கல்வி முறை பொது சேவையின் உணர்விலிருந்து முற்றாக மாற்றப்பட்டுள்ளது. கல்வியின் அணுகல் மற்றும் தரம் குறித்த கவலையின்றி, கல்விக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
மத்தியில் அதிகாரக் குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமாக்கல் எனும் எண்ணத்தின் விளைவுகள் நமது மாணவர்கள் மீது நேரடியாக விழுந்துள்ளன. இந்தியாவின் பொதுக் கல்வி முறை மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் முடிவுக்கு வர வேண்டும் என்று சோனியா காந்தி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.