வாஷிங்டன் டி.சி.,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்கு தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கேற்ப, அந்நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ஆதரவளித்து வருகிறது. ஆயிரக்கணக்கான வீரர்களை ரஷிய போரில் ஈடுபடுத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவில் பைடன் தலைமையிலான அரசு முடிவுக்கு வந்த பின்னர், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, உக்ரைன் போரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக முதலில், ரஷியாவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு டிரம்ப் அரசு வரி விதிப்பை அமல்படுத்தியது.
போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என புதினிடம், டிரம்ப் கேட்டு கொண்டார். ஜெலன்ஸ்கியையும் வெள்ளை மாளிகைக்கு நேரில் அழைத்து பேசினார். இதன்பின்னர், திடீரென உக்ரைனுக்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. உக்ரைனுக்கான உளவு தகவல்களை அளிப்பதும் நிறுத்தப்பட்டது.
இந்த சூழலில், போரானது முடிவுக்கு வருவதற்கு பதிலாக தீவிரமடைந்தது. ரஷியா, தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒத்துழைக்காவிட்டால் கூடுதல் வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி என்.பி.சி. நியூஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில், நான் அதிக கோபத்தில் இருக்கிறேன். நீண்டகாலம் ஆகியும் நீங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இல்லையா? என ரஷியாவை குறிப்பிட்டு கூறினார்.
உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ரஷியா மற்றும் என்னால் முடியவில்லை என்றால், அது ரஷியாவின் தவறு என்றே நினைக்கிறேன். அப்படி இருக்க கூடாது. ஆனால், அது ரஷியாவின் தவறு என நான் கருதினால், ரஷியாவில் இருந்து வெளிவரும் அனைத்து எண்ணெய்களின் மீது 2-வது முறையாக வரிகளை விதிக்க போகிறேன் என மிரட்டும் வகையில் கூறியுள்ளார்.
புதினிடம் இந்த வாரம் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஆம். ஆனால், புதின் சரியான செயல்களை செய்கிறார் என்றால் மட்டுமே அது நடக்கும். நான் கோபத்துடன் இருக்கிறேன் என புதினுக்கு நன்றாக தெரியும் என்றார்.