பொகோட்டா,
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் கார்டாஜினா நகரில் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள், அறிவியலாளர்கள், சுகாதார அமைப்புகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், 2040-ம் ஆண்டுக்குள் காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை பாதியாக குறைக்க சுமார் 50 நாடுகள் உறுதியளித்துள்ளன. காற்றை தூய்மையாக்க அனைத்து தரப்பில் இருந்தும் அவசர நடவடிக்கைகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தினார்.
கொலம்பியா அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு நடத்திய இந்த மாநாட்டில், கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வன்முறையை விட காற்று மாசு காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்த மாநாடு சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான கொள்கைகளை செயல்படுத்துவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
இந்திய அரசு சார்பில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்ட ஆகாஷ் ஸ்ரீவஸ்தவா, “2040-ம் ஆண்டுக்குள் காற்று மாசுபாட்டின் உடல்நல பாதிப்புகளை குறைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று தெரிவித்தார்.