பெங்களூரு: எல்விஎம்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜினை, வெற்றிகரமாக பரிசோதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
எல்விஎம் 3 ராக்கெட்டில் தற்போது எல்110 என் திரவ எரிபொருள் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 4 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை புவியிசைவு சுற்றுவட்டபாதைக்கு கொண்டு செல்ல முடியும். 5 டன்கள் எடையுள்ள செயற்கை கோள்களை கொண்டு செல்லும் வகையில் எல்விஎம்-3 ராக்கெட்டில் செமி கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இஸ்ரோவின் திரவ எரிபொருள் இன்ஜின் தயாரிப்பு மையம் (எபிஎஸ்சி) செமி கிரையோஜெனிக் இன்ஜினை (எஸ்இ-2000) உருவாக்கியது. இது திரவ ஆக்ஸிஜன்/மண்ணெண்ணெய் எரிபொருளில் இயங்கும். இதன் பரிசோதனை வெற்றி பெற்றது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில், செமி கிரையோஜெனிக் இன்ஜினின் பரிசோதனை நேற்று முன்தினம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்த்தபடி இன்ஜின் செயல்பாட்டின் அனைத்து பரிசோதனைகளும் சுமூகமாக முடிந்தது. இந்த இன்ஜினில் தொழில்நுட்பம் சவாலானது. குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றன. இந்த இன்ஜினின் பாகங்கள் அதிக வெப்பத்தை தாங்கும் வகையிலானது. இந்த பாகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டன. இந்த நவீன இன்ஜின் மகேந்திரிகிரியில் உள்ள சோதனை மையத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட என்ஜினில் கூடுதல் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது.
இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.