PM Narendra Modi: பிரதமர் நரேந்திரா மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகருக்கு வருகைந் தந்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கும் வருகை தந்திருந்தார். இந்நிலையில் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் தனது ஓய்வை அறிவிக்கவே வந்ததாக பரபரப்பு கருத்து ஒன்றை உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் மும்பையில் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவரது ஓய்வு குறித்து அறிவிக்கவே சென்றார். என்னுடைய நினைவின்படி, கடந்த 10-11 ஆண்டுகளில் அவர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றதே இல்லை. ஆர்எஸ்எஸ் தலைமையை மாற்ற நினைக்கிறது. பிரதமர் மோடி தற்போது தலைமை விட்டுச் செல்கிறார். நரேந்திர மோடிக்கு பின் யார் பிரதமராவார் என்பதை ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும். ஆர்எஸ்எஸ் தேர்வு செய்யும் நபர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருப்பார். அதனால்தான் பிரதமர் மோடி நாக்பூருக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரகசிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என பேசினார்.
சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஹூசைந் தல்வாய், சஞ்சய் ராவத்தின் கருத்துடன் உடன்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”அவர் சொன்னது சரியென்றே நான் நினைக்கிறேன். அவர்கள் 75 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வு அளித்துவிடுவார்கள். பிரதமர் மோடியும் வயதாகிவிட்டார், அதனால் இப்போது ஓய்வு பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம். அவர்களை மகிழ்விக்க அவர் அங்கு சென்றிருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு, விஹெச்பி, பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை உருவாக்கியது” என்றார்.