மும்பை: “புதிய கல்விக் கொள்கை நமது கல்வி முறையை இந்திய மயமாக்குகிறது. எனவே, அதனை சோனியா காந்தி ஆதரிக்க வேண்டும்” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை தனதாக்கும் மத்திய அரசின் முயற்சி (centralisation), கல்வியை வணிகமயமாக்குவது (commercialisation), பாடப்புத்தகங்களில் வகுப்புவாத கருத்துகளைத் திணிப்பது (communalisation) ஆகிய மூன்று c-களும் இந்தியக் கல்வி முறையை வேட்டையாடுவதாக விமர்சிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கட்டுரை ‘தி இந்து’-வில் இன்று வெளியானது. வாசிக்க > இந்தியக் கல்வி முறையை வேட்டையாடும் மோடி அரசின் 3 ‘C’ – சோனியா காந்தி விவரிப்பு
இந்த மூன்று அம்சங்களும் புதிய கல்விக் கொள்கை மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதில் சோனியா காந்தி விமர்சித்திருந்தார். சோனியா காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், “நமது நாட்டை அடிமைப்படுத்த மெக்காலே அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வி இந்திய மயமாக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது. எந்தவொரு தேசபக்தரும் இந்த மாற்றத்தை ஆதரிப்பார். சோனியா காந்தி இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும். இந்திய கல்வி முறையை இந்திய மயமாக்குவதை முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், “சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டுகளாக, காங்கிரஸ் நாட்டை காலனித்துவ மனநிலையின் பிடியில் வைத்திருந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றைக் கற்பிப்பதற்குப் பதிலாக, கல்வி மூலம் வகுப்புவாதத்தையும் திருப்திப்படுத்தலையும் காங்கிரஸ் பரப்பியது. சோனியா காந்தி தனது கண்களில் இருந்து இத்தாலிய கண்ணாடியை அகற்றினால் மட்டுமே உண்மையான தேசபக்தியைக் காண முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதன் மூலம், காலாவதியான, பிளவுபடுத்தும் அமைப்பை சோனியா காந்தி ஆதரிப்பதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் உசேன், தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “நாட்டின் கல்விக் கொள்கை சிறப்பாக உள்ளது, ஆனால் சோனியா காந்தி அதை எதிர்க்கிறார். மக்களை கோபப்படுத்தும் கல்விக் கொள்கையை அவர் விரும்புகிறார். இந்தியாவின் கல்விக் கொள்கையை அவர் கேள்வி கேட்பது துரதருஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.