புதுடெல்லி: இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர். இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அவற்றில், “முஸ்லிம்கள் மட்டும் தெருக்களில் தொழுகை நடத்த வில்லை. இந்துக்கள் தெருக்களில் ஹோலி கொண்டாடு கிறார்கள், சிவராத்திரியும் தெருக்களில் கொண்டாடப்படுகிறது. காவடிகளுடன் தெருக்களில் வலம் வருகிறார்கள். ராமநவமி யாத்திரையும் தெருக்களில் நடத்தப்படுகிறது. தீபாவளியன்று தெருக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது, விநாயகர் சதுர்த்தி தெருக்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல சூழ்நிலையை காவல் துறையினர் கெடுக்க முயற்சிக்க கூடாது” என்ற வாசகங்கள் இருந்தன.
இதற்கிடையில், முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்த பல இடங்களில் முயற்சித்தனர். முராதாபாத்தில் கல்சஷீத் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்த சென்றவர்களை போலீஸார் தடுத்தனர். அங்கு இருதரப்பினர் இடையே மோதல் சூழல் உருவானது.
இந்த ஈத்காவில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் வசதி உள்ளது. இதற்கும் அதிகமான எண்ணிக்கையில் அங்கு முஸ்லிம்கள் தொழுகைக்கு திரண்டதால் அவர்களை அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார் தடுத்தனர். ஈத்கா வில் இடமில்லாத நிலையில் மற்றொரு ஷிப்டாக மேலும் ஒரு சிறப்பு தொழுகை நடத்த காவல் துறையினர் கூறினர்.
சஹரன்பூரில் ஈத் தொழுகைக்கு வந்தவர்கள் பாலஸ்தீன கொடிகளையும் கொண்டு வந்தனர். மேலும் பலர் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். தொழுகைக்கு பின் சிலர் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர். இதில் தலையிட்டு உபி போலீசார் முஸ்லிம்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோல், மீரட்டின் சில மசூதிகளிலும் முஸ்லிம்கள் இடமின்மையால் சாலைகளில் தொழுகை நடத்த முயற்சித்தனர்.
லக்னோவில் ஈத் தொழுகையின் போது வாழ்த்து தெரிவிக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சென்றார். அவரை போலீஸார் தடுத்ததாக அகிலேஷ் குற்றம் சுமத்தினார்.
டெல்லியின் ஜாமியா மசூதியிலும் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அமைதியாக நடைபெற்றது. அப்போது வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.