“சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள மொதபாரி பகுதியில் கடந்த 27ம் தேதி இரண்டு குழுக்களிடையே வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக 61 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமியர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,“மாநிலத்தில் அமைதி நிலவ எனது அரசு உறுதிபூண்டுள்ளது. கலவரங்கள் நிகழாமல் தடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அனைத்து மதங்களுக்காகவும் எங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பெரும்பான்மையினரின் கடமை சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, சிறுபான்மையினரின் கடமை பெரும்பான்மையினருடன் இருப்பது. யாரும் கலவரத்தில் ஈடுபட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு ஒரே ஒரு குரல் மட்டுமே உள்ளது, அது கலவரங்களை நிறுத்துவது.

நாங்கள் மதச்சார்பற்றவர்கள். நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது; அதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் குழப்பத்தை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. சாமானியர்கள் குழப்பத்தை உருவாக்குவதில்லை, ஆனால் அரசியல் கட்சிகள்தான் செய்கின்றன. இன்று சிவப்பும் காவியும் ஒன்றாகிவிட்டன. அது அப்படியே இருக்கட்டும். இது அவமானகரமான விஷயம்.” என தெரிவித்தார்.

இதனிடையே, மொதபாரி பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜி) ஜாவேத் ஷமிம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிலைமை தற்போது முழுமையாக கட்டுக்குள் உள்ளது. இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வன்முறை எதுவும் பதிவாகவில்லை.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.