செருப்புகள் ஜாக்கிரதை விமர்சனம்: செருப்புக்குள் வைரம்… சிரிக்க வைக்கிறதா சிங்கம்புலி சீரிஸ்?

சென்னையில் வைரக் கடத்தலில் ஈடுபடுகிறார் ரத்னம். அப்படி ஒரு நாள் அவர் வைரத்தைக் கடத்திச் செல்லும்போது காவல்துறையினருக்கு ரத்னத்தைப் பற்றி எங்கிருந்தோ தகவல் பறக்கிறது.

அதனைத் தொடர்ந்து ரத்னத்தைக் காவல் துறையினர் பின் தொடர்கிறார்கள். காவல்துறைக்கு அஞ்சி தன்னுடைய செருப்பின் அடிப்பக்கத்தில் கடத்திக் கொண்டு வந்த வைரத்தை மறைத்து வைக்கிறார்.

பின், அந்த செருப்பைப் பத்திரப்படுத்த எதேச்சையாகப் பார்க்கும் தனது நண்பன் தியாகுவிடம் (சிங்கம் புலி) ஒப்படைக்கிறார் ரத்னம்.

Seruppugal Jaakirathai Review
Seruppugal Jaakirathai Review

தியாகுவிடமிருந்த அந்தச் செருப்பை அவரின் மகன் வீட்டுத் தோட்டக்காரருக்குக் கொடுத்துவிடுகிறார். அவரிடமிருந்து இந்த செருப்பு பல இடங்களுக்கும் ரவுண்டு அடித்து இறுதியாக மறைந்த கவுன்சிலர் ஏகம்பரம் வீட்டிற்குச் செல்கிறது.

இழவு வீட்டில் இருக்கும் வைரத்தைக் கொண்ட செருப்பைத் தியாகு மீட்டாரா, ரத்னம் மீட்டாரா, யாருக்கு வைரம் கிடைத்தது என்பதுதான் 6 எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப் சீரிஸின் கதை.

இந்த சீரிஸ் `ஜீ – 5′ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

கதையின் நாயகனாக இந்த சீரிஸில் களமிறங்கியிருக்கிறார் சிங்கம்புலி. முதல் முறையாக இப்படியான ஒரு பரிமாணத்தில் களமிறங்கியிருக்கும் சிங்கம்புலி தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பையும், கதாபாத்திரத்தின் கனத்தையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.

திரைக்கதை டவுன் ஆகும் இடங்களிலெல்லாம் ஒன் மேன் ஆர்மியாக தாங்கிப் பிடிக்கப் போராடியிருக்கிறார் சிங்கம்புலி. இவரின் மகனாக வரும் விவேக் ராஜகோபால் கதாபாத்திரம்தான் கதைக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

Seruppugal Jaakirathai Review
Seruppugal Jaakirathai Review

ஆனால், அவர் நடிப்பில் செயற்கைதனங்களை மட்டுமே வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் நடிப்பைக் கொடுக்காதது வெரி ராங் ப்ரோ!

மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் நகைச்சுவைக் களத்திற்குத் தேவையான எந்த முயற்சியும் இல்லாதது பெரிய மைன்ஸ்!

இப்படியான ரகளைகளுக்கு இடையிடையே ஆறுதலாக வந்து நகைச்சுவைக்குப் பலம் சேர்க்கிறார் `லொள்ளு சபா’ மனோகர். இவர்களைத் தாண்டி மற்ற இடங்களில் வரும் உடுமலை ரவி, சபிதா, ‘மாப்ள’ கணேஷ் ஆகியோரும் நடிப்பில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வைரத்தைக் கடத்தும் காட்சியிலும் அதைப் பதுக்கிக் கொண்டு செல்லும் காட்சியிலும் தேவையான பரபரப்பைத் தன் பின்னணி இசையால் கொடுத்திருக்கிறது இசையமைப்பாளர்கள் எல்.வி முத்து – கணேஷ் கூட்டணி.

அதேநேரம், நகைச்சுவைக் கதைகளில் வழக்கமான டெம்ப்ளட் காமெடி இசையையே இட்டு நிரப்பி, அக்காட்சிகளை டல் அடிக்க வைக்கிறார்கள்.

Seruppugal Jaakirathai Review
Seruppugal Jaakirathai Review

தொடக்கத்தில் ஏரியல் ஷாட்களை அமைத்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ஒளிப்பதிவாளர் கே. கங்காதரன் அதன் பிறகு எந்த இடத்திலும் ஆச்சரியப்படுத்தாதது பெரிய ஏமாற்றம்.

காமெடிக்கு வலு சேர்க்காத அத்தனை இடங்களையும், மீண்டும் மீண்டும் ரிப்பீட் அடிக்கும் அந்த செருப்பைத் தேடும் காட்சிகளையும் சிறிதும் கருணையின்றி படத்தொகுப்பாளர் வில்லி ஜே சசி நீக்கியிருக்கலாம்.

க்ரைம் கலந்த காமெடி சீரிஸாக இதன் 6 எபிசோடுகளை விரித்திருக்கிறார்கள். ஆனால், க்ரைம் உணர்வும் முழுமையாக இல்லாமல் காமெடி உணர்வும் முழுமையாக இல்லாமல் நடுவில் சிக்கித் தவிக்கிறது இந்த சீரிஸ்.

பல க்ரைம் படங்களில் பயன்படுத்திய அதே பார்முலாவை இந்தக் கதையின் ஐடியாவிலும் வலுக்கட்டாயமாகத் திணித்திருக்கிறார்கள்.

ஆழமில்லாத கதாபாத்திர வடிவமைப்பு, வலுவில்லாத கதையின் திருப்பம், யூகிக்கும்படியான க்ளைமேக்ஸ் என அத்தனை விஷயங்களிலும் மேம்போக்கை உணர முடிகிறது.

Seruppugal Jaakirathai Review
Seruppugal Jaakirathai Review

இதுமட்டுமல்ல, காலாவதியான 80-ஸ் காமெடி வசனங்கள், முகம் சுழிக்க வைக்கும் டபுள் மீனிங் காமெடி வசனங்கள் என சீரிஸில் டஜன் கணக்கிலான பிரச்னைகளும் அடங்கியிருக்கின்றன.

இதையெல்லாம் தாண்டி, வேறு ஒருவரின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மற்றொருவர் தனது மொபைலில் யூ.பி.ஐ சேவையைப் பயன்படுத்த முடியாது என்கிற சாதாரண விஷயத்தில்கூட லாஜிக் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.

இதைத் தாண்டி படத்தில் பல இடங்களில் ஏன், எதற்கு என்கிற கேள்விகள் பல முறை பல கோணங்களில் எழுகின்றன.

ஜாக்கிரதையாக எந்தப் பணியையும் மேற்கொள்ளாத இந்த `செருப்புகள் ஜாக்கிரதை’ சீரிஸ் காமெடியும் இல்லாமல், க்ரைமும் இல்லாமல், அயற்சியான உணர்வை மட்டுமே கொடுக்கிறது!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.