பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் கட்டிய 30 மாடி கட்டிடம் நிலநடுக்கத்தால் தரைமட்டமானது தொடர்பாக சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்தில் கடந்த 28-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
பாங்காக்கில் பல்வேறு உயரமான கட்டிடங்கள் உள்ளன. நிலநடுக்கத்தின்போது சுமார் 95 சதவீத உயரமான கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. தாய்லாந்து அரசின் தணிக்கை துறைக்காக இந்த 30 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. சீனாவை சேர்ந்த ‘சைனா ரயில்வே எண் 10 இன்ஜினீயரிங் குரூப்’ என்ற நிறுவனம் டெண்டர் எடுத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தது. கட்டிடத்தின் திட்ட மதிப்பு ரூ.529.57 கோடி ஆகும். இதில் தாய்லாந்து அரசின் தணிக்கை துறை அலுவலகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வந்தன.
இதுகுறித்து தாய்லாந்து உள்துறை அமைச்சர் அனுடின் சார்ன் விரகுல் கூறியதாவது: சீன நிறுவனத்தின் கட்டுமானம் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 7 நாட்களில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யும். குழு அளிக்கும் பரிந்துரைகளின் படி சீன நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாங்காக்கில் பல்வேறு பழைய கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கி நிற்கின்றன. ஆனால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து நொறுங்கியிருப்பது கட்டுமானத்தின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. உயர் நிலைக் குழு சம்பவ இடத்தில் விரிவான ஆய்வு நடத்தும்.
இவ்வாறு அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார்.
பாங்காக் காவல் துறை மூத்த தலைவர் நோபாசின் பொன்சா வாத் கூறியதாவது: சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தின் ஊழியர்கள், அங்கிருந்த முக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 5 சீனர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்டுமானம் குறித்த டிஜிட்டல் விவரங்களையும் சீன நிறுவனம் அழித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
சீன நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் கட்டிடம் இடிந்த இடத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டிடம் இடிந்தது தொடர்பாக காவல் துறை சார்பில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீனாவின் முன்னணி கட்டு மான நிறுவனமான ‘சைனா ரயில்வே எண் 10 இன்ஜினீயரிங் குரூப்’ பாங்காக்கில் கட்டிய 30 மாடி கட்டிடம் இடிந்து நொறுங் கியிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. பல்வேறு நாடுகளில் சீன கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.