''திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடுங்கள்; வக்பு மசோதாவை ஆதரியுங்கள்'' – ராஜீவ் சந்திரசேகர்

திருவனந்தபுரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் விளையாட்டை கைவிட்டு, மக்களுக்கு உதவும் வகையில் வக்பு மசோதாவை ஆதரிக்குமாறு கேரள எம்பிக்களுக்கு அம்மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜிவ் சந்திரசேகர், “வக்பு (திருத்த) மசோதா விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் பல கிறிஸ்தவ அமைப்புகளும் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றன. ஏனெனில் கேரளாவில், கொச்சிக்கு அருகிலுள்ள முனம்பம் என்ற இடத்தில், நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தங்கள் நிலத்தை வக்பு கைப்பற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

இது பல மாதங்களாகவும், பல வருடங்களாகவும் போராடி வரும் ஒரு பிரச்சினை. கேரள எம்.பி.க்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. வெறும் திருப்திப்படுத்தும் அரசியல் விளையாடுவதை விட, சிக்கலில் உள்ள மக்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இன்று ஒரு முக்கியமான நாள். காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து முடிவெடுக்க வேண்டும். வக்பு (திருத்த) மசோதா எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. அது இந்திய அரசியலமைப்பின் உயர் விழுமியங்களுக்கு ஏற்ற ஒரு சட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் கோரிக்கைக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (KCBC) கேரளத்தின் அனைத்து எம்.பி.க்களும் வக்பு திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்ற விடுத்துள்ள கோரிக்கையை நான் வரவேற்கிறேன்.

நமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை கவனித்து அவற்றை நிவர்த்தி செய்வது அரசியலில் உள்ளவர்களின் கடமையாகும். உதாரணமாக, கேரளாவின் முனம்பத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு தீர்வைத் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

வக்பு திருத்த மசோதா எந்த சமூகத்துக்கும் எதிரானது அல்ல. ஆனால், சிலர் அவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள். இது சிலரின் மனதில் விஷத்தை ஏற்படுத்தும் பிரச்சாரமாகும். பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமைகளையும் பாதுகாக்க பாடுபடுகிறது. மேலும், அதை தொடர்ந்து செய்யும். திருப்திப்படுத்தும் அரசியலின் பக்கம் நிற்காமல், அனைத்து மக்களின் நலனுக்காகவும் அனைத்து கேரள எம்.பி.க்களும் இந்த மசோதாவை ஆதரிப்பார்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும்போது, அனைத்து கேரள எம்பிக்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கடந்த 29ம் தேதி கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.