சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். இதற்கு சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முதல் போட்டியிலேயே மிகவும் கம்மியான இலக்கை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று வெற்றி பெற்றனர். ஆனால் அந்த போட்டியில் வெற்றி பெற்றதால் அதனைப் பற்றி பெரிதாக யாரும் பேசவில்லை. ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளதால் விமர்சனங்கள் அதிகமாக எழுந்துள்ளது.
குறிப்பாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு முன்பு அஸ்வின் இறங்கியது அதிகமான கேள்விகளை எழுப்பி வருகிறது. அஸ்வினுக்கு முன்னால் தோனி இறங்கி இருந்தால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி கடைசியில் இறங்கி சிக்சர் மற்றும் பவுண்டரிகளை அடித்தார். இருப்பினும் ஆரம்பத்தில் இருந்து ரன்களை அடிக்காததால், சென்னை தோல்வி அடைந்தது. கடந்த மூன்று வருடங்களாக தோனி கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே பேட்டிங் இறங்குகிறார். இதற்கு தோனியின் முழங்கால் பிரச்சனையும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டெபின் பிளெமிங் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்டெபின் பிளெமிங் கருத்து
“தோனி கடைசியில் விளையாட தான் நினைக்கிறார். அவருடைய உடல், முழங்கால்கள் முன்பு இருந்தது போல தற்போது இல்லை. கடந்த ஆண்டை விட கால்கள் நன்றாகவே அசைத்தாலும், ஆனால் அதில் இன்னும் ஒரு தேய்மானம் இருக்கிறது. அவரால் பத்து ஓவர்கள் முழு வீச்சில் பேட்டிங் செய்ய முடியாது, அதனால் அவர் போட்டியில் நமக்காக என்ன கொடுக்க முடியும் என்பதை அன்றைய தினம் கொடுக்கிறார். இன்றைய ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் இறங்கினார்.
வாய்ப்புகள் கிடைக்கும்போது மற்ற வீரர்களை ஆதரிப்பார். அதனால் தோனி அதனை சமநிலைப்படுத்துகிறார். நான் கடந்த ஆண்டு சொன்னேன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் மிகவும் மதிப்புமிக்கவர். தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் தற்போதும் சிறந்து விளங்குகிறார். அவரை ஒன்பது, பத்து ஓவர்கள் நின்று ஆட முடியாது. ஆனால் அவர் அதனை வேண்டுமென்று செய்யவில்லை. போட்டியின் தன்மை பொறுத்து, 13-14 ஓவர்களில் யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர் விளையாட விரும்புகிறார்” என்று ஸ்டெபின் பிளெமிங் தெரிவித்துள்ளார்.