2025 ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 197 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. அந்த இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் சிஎஸ்கே அணி மீது வைக்கப்பட்டன.
குறிப்பாக எம். எஸ். தோனி 9ஆம் வரிசையில் இறங்கியது எக்கச்சக்கமான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதையடுத்து நேற்று (மார்ச் 30) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 7ஆம் வரிசையில் இறங்கினார். அவர் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
மேலும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாட்டின் சுயநலத்தால் தோற்கும் சிஎஸ்கே?? – இந்த வருஷம் கப் கிடையாது…
இந்த நிலையில், தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும் அதன் மீதான விமர்சனங்கள் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் பேசி உள்ளார். தோனியின் பேட்டிங் வரிசை என்பது போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரத்தை பொருத்தது. இது குறித்த முடிவை அவர் தான் எடுக்கிறார். அவர் உடல் மற்றும் முழங்கால் முன்பை போல இல்லை. அவருக்கு சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் களத்தில் அதிக நேரம் நின்று பேட்டிங் செய்ய இயலாது. எனவே ஒவ்வொரு நாளும் அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.
இன்று போல (அதாவது நேற்று மார்ச் 30) போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால் அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார். அவரை 10 ஓவர்கள் வரை பேட்டிங் ஆட செய்யலாம். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை. அவர் 14வது ஓவருக்கு பிறகே பேட்டிங் செய்ய முற்படுகிறார். அதுவும் களத்தில் யார் இருக்கிறார் என்பதை வைத்து அவர் அந்த முடிவை எடுக்கிறார் என ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்தார்.
மேலும் படிங்க: தோனி குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்ட பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்!