கவுகாத்தி,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை எட்ட முடியாத சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே அடித்து நடப்பு தொடரில் 2-வது தோல்வியை பதிவு செய்தது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். கடந்த போட்டியில் 9-வது வரிசையில் களமிறங்கியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த மகேந்திரசிங் தோனி இம்முறை முன்கூட்டியே களமிறங்கினார். இருப்பினும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
கடைசி 3 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரவீந்திர ஜடேஜா, தோனி களத்தில் இருந்தனர். ஆனால் தீக்ஷனா வீசிய 18-வது ஓவரில் இவர்கள் வெறும் 6 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால் நெருக்கடி மேலும் அதிகரித்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி (16 ரன்) கேட்ச் ஆனார்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இருப்பினும் ரசிகர்கள், தோனி இன்னும் முன்வரிசையில் களமிறங்கி இருக்க வேண்டும் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தோனி முன்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்காததற்கான காரணம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “எம்.எஸ்.தோனி நேரத்தை பொறுத்து மதிப்பிடுகிறார். அவரது உடல், முழங்கால்கள் முன்பு இருந்ததைப் போல இல்லை. அவர் நன்றாக நகர்கிறார். இருப்பினும் சில பிரச்சினைகள் இன்னும் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் முழுவதுமாக பேட்டிங் செய்ய முடியாது. எனவே, அவர் நம்மால் அணிக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை மதிப்பிடுகிறார்.
இன்று போல் ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் செய்ய செல்வார். மற்ற நேரங்களில் வீரர்களை ஆதரிப்பார். கேப்டனுக்கு உதவுவது, விக்கெட் கீப்பிங் போன்றவற்றில் தோனி இப்போதும் மிகவும் மதிப்புமிக்கவர். எனவே, பாருங்கள் 13 – 14 ஓவர்களில் அணியின் நிலையை பொறுத்து அவர் களமிறங்குவார்” என்று கூறினார்.