நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை

புதுடெல்லி,

ரமலான் பண்டிகையை நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். ரமலான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் இருந்து, மசூதிகளுக்கு சென்ற அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையில் சமூக மக்கள் ஒன்றாக திரண்டு தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டனர். அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டி கொண்ட அவர்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மற்றும் அண்டை வீட்டாருடனும் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன்படி, டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜமா மசூதியில் இன்று காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்டனர். புனித ரமலான் மாத நிறைவை குறிக்கும் வகையில், புதிய ஆடைகளை அணிந்து வந்து ஒற்றுமையாக தொழுகையில் ஈடுபட்டனர்.

மும்பையிலும், ஜுமா மஸ்ஜித் மஹிம் தர்காவில் மக்கள் திரளாக வந்து தொழுகை நடத்தினர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரமலான் மாத நிறைவை முன்னிட்டு, நேற்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய ஆடைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். கடைகளில் இனிப்பு, பலகாரங்கள் விற்பனையும் ஜோராக நடந்தது. தொண்டு, இரக்கம் உள்ளிட்டவற்றின் மீதுள்ள மதிப்புகளை மக்களிடையே மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்த ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில், மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல் மற்றும் மற்றவர்களின் நலனில் கவனம் கொள்ளும் இஸ்லாமிய கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் உணவு, உடை வழங்குதல் மற்றும் ஆதரவற்றோருக்கு பலரும் இயன்ற உதவிகளை செய்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.