`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத் கமிட்டிகளை அமைத்து சிறப்பான கட்டமைப்பு எடப்பாடி பழனிசாமி உருவாக்கி வருகிறார்

ஆர்.பி.உதயகுமார்

`அந்த நீட் ரகசியம்’

கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது, நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதயநிதி கூறினார், அந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டபோது, ரகசியத்தை வெளியிட மாட்டோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி இதற்கு தீர்வு காணும் வகையில் 7.5 சகவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அப்போது ஆளுநர் இதற்கு கையெழுத்திடவில்லை, தன் பதவிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்படியொரு ஆளுமை மிக்க தலைவராக எடப்பாடியார் இருந்தார். தொடர்ந்து நான்கரை ஆண்டு காலம் பல்வேறு திட்டங்களால் மக்கள் இதயங்களில் இடம் பிடித்தார் .

`உசேன் போல்டை விட மிக வேகமாக ஓடுகிறார் உதயநிதி’

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு காலமாகிவிட்டது, நீட் தேர்வு ரத்து செய்வோம் என்ற ரகசியத்தை வெளியிடவில்லை, மேலும் நீட் தேர் ரத்து செய்ய பல லட்சம் கையெழுத்து வாங்கினார்கள், அந்த கையெழுத்து குறித்த ரகசியமும் வெளியிடவில்லை. தற்போது நீட் தேர்வு பற்றி உதயநிதியிடம் கேள்வி கேட்டால் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டை விட மிக வேகமாக ஓடுகிறார், அதுமட்டுமல்லாது சட்டமன்றத்தில் என் பேச்சுகளை எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் கேட்கவில்லை என்று உதயநிதி பேசுகிறார். நாங்கள் எங்கே வெளியேறினோம், காவலர் முத்துகுமார் மரணத்திற்கு நீதி கேட்ட எங்களைத்தான் உங்கள் தந்தையார் வெளியேற்றினார்.

உதயநிதி!
உதயநிதி!

தற்போதுகூட நீட் தேர்வை நான்கு முறை தொடர்ந்து எழுதிய மாணவி தர்ஷினி தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது கூட நீட்டுக்கு பதில் இல்லை, இதற்கு மத்திய அரசைதான் கேட்கணும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.

யார் அடுத்த முதலமைச்சர் என்று முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என்று கருத்துக் கணிப்புகளை கூறுகிறார்கள். நாட்டுக்கு தற்போது இது முக்கியமா? நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் உள்ளது. நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சாதனை திட்டங்களை செய்த எடப்பாடி பழனிசாமி மக்கள் இதயங்களில் முதல் இடத்தில் உள்ளார் என்பதுதான் உண்மை.

எடப்பாடியார் இதுபோன்று விளம்பரம் தேடவில்லை. அதேபோன்று வாரிசு அரசியலை வைத்துக்கொண்டு விளம்பரம் தேடவில்லை. கருணாநிதியை கண்ணதாசன் விமர்சித்து புத்தகத்தில் எழுதி உள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி மகனாக பிறந்து உழைப்பால் உயர்ந்துள்ளார். கருத்துக்கணிப்பு என்று மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம், இன்றைக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்.

ஆர்.பி உதயகுமார்

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதியை கேட்டு 39 எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் போராட்டம் செய்யாமல் தமிழகத்தில் போராட்டம் செய்கிறார்கள், இன்றைக்கு கடலில் பேனா சிலை வைக்க நிதி ஒதுக்கும் ஸ்டாலின் அந்த நிதியை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கலாமே? டெல்லியில் நிதி வர தாமதமானால் தமிழக அரசு தாரளாமாக நிதி வழங்கலாமே, அது மட்டுமல்ல நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சரியான கணக்கு கொடுக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறார்கள், இன்றைக்கு தப்பு கணக்காகவேதான் இந்த அரசு உள்ளது.

தமிழகத்தில் இன்று மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து உயர்வு என மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுயநலத்துடன் திமுக அரசு உள்ளது. எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்காக உழைத்த ஒரே தலைவரான எடப்பாடி பழனிசாமி நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.