ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 16 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தண்டேவாடா மாவட்ட எல்லையில் அமைந்துள்ள உபம்பள்ளி கெர்லபால் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே இடைவிடாத மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு சம்பவ இடத்திலிருந்து 16 மாவோயிஸ்ட்களின் உடல்களும் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக பஸ்தார் போலீஸ் ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் அபாய கட்டத்தை கடந்துவிட்டனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த என்கவுன்ட்டரில் மாவோயிட்ஸ்கள் மேலும் சிலர் கொல்லப்பட்டிருக்கவோ அல்லது காயம் அடைந்திருக்கவோ வாய்ப்புள்ளது. அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது” என்றார்.
இந்த என்கவுன்ட்டர் குறித்து எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “நக்சலிசத்துக்கு எதிராக மற்றொரு தாக்ககுதல். சுக்மா மாவட்டத்தில் நமது பாதுகாப்பு படையினர் 16 நக்சலைட்களை கொன்றுள்ளனர். பெருமளவு ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சலிசத்தை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம். ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தை கொண்டு வராது, அமைதியும் வளர்ச்சியும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வரும் என்பதே ஆயுதம் ஏந்தியவர்களுக்கு எனது வேண்டுகோள் ஆகும்” என்று கூறியுள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நக்சல் வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சுக்மா உள்ளது. கடந்த காலத்தில் இம்மாவட்டத்தில் பல தாக்குதல்கள் நடந்துள்ளன.
பஸ்தார் பிராந்தியத்தில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற இரண்டாவது பெரிய என்கவுன்ட்டர் இதுவாகும். இப் பிராந்தியத்தில் உள்ள பீஜப்பூர், கான்கெட் மாவட்டத்தில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டரில் 30 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்கள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்பு வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.