சென்னை: கொள்ளுப்பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பேரனுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் தானே எழுதிய தாலாட்டு பாடி அசத்தினார். பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் கவிதா.
அவரது மகன், கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தியின் மகளை திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினர் மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி என குடும்ப உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.
விழாவின் சிறப்பம்சமாக ராமதாஸ், தனது கொள்ளுப்பேரனுக்காக தானே எழுதிய தாலாட்டு பாடல் ஒன்றை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். “ஆராரோ, ஆரிராரோ.. சொர்ணத்தின் மாம்பழமே..” எனத்தொடங்கும் அப்பாடலை ராமதாஸ் பாடியபோது குடும்பத்தினர் மெய்மறந்து பாட்டினை ரசித்து கேட்டனர். தொடர்ந்து அவர் பாடி முடித்ததும், பேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். கூடியிருந்த அனைவரும் ஒருசேர கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. விழாவுக்கு வருகை தந்த உறவினர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து, குழந்தைக்கு பரிசு பொருட்களை வழங்கினர். கொள்ளுப்பேரனுக்காக ராமதாஸ் தாலாட்டு பாடல் பாடிய சுவாரஸ்யமான நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.