புதுச்சேரி: “புதுச்சேரியில் பிரியாணி கடைகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தரத்தை பார்த்து யார் அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. அரசும், நுகர்வோரும் இப்பிரச்சினையை கண்டுக்கொள்வதில்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
திருக்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை இணைந்து நடத்திய உலக நுகர்வோர் தின விழா இன்று (மார்ச் 31) நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியது: “மருந்து, பால் தரமாக இல்லை என வழக்கறிஞராக நான் இருந்தபோது வழக்கு தாக்கல் செய்வார்கள். சாதாரண நீதிமன்றங்களில் தாக்கல் செய்தால் தாமதமாக தீர்ப்பு வரும் என்பதால் தற்போது நுகர்வோருக்கு தனி நீதிமன்றமே வந்தது.
சுற்றுலாப் பயணிகளால் உள்ளூர் மக்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது.நூற்றுக்கணக்கானோர் தெருவோரத்தில் உணவு கடை வைத்துள்ளனர். சனி, ஞாயிறுகளில் நெல்லித்தோப்பு தொகுதியில் லெனின் தெருவில் மட்டும் 80 பிரியாணி கடைகள் உள்ளன. பழைய நீதிமன்ற வளாகத்திலிருந்து அண்ணா சிலை அருகே 40 பிரியாணி கடைகள் உள்ளன.
பிரியாணி தரமாக உள்ளதா? அங்கீகரிக்கப்பட்டதா? யார் அனுமதி அளித்தார்கள் என தெரியவில்லை. அரசும் கண்காணிப்பதில்லை, நுகர்வோரும் கண்டுகொள்வதில்லை. முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு மருத்துவரிடம் செல்லும் சூழல் உள்ளது. புதிதாக ஹோட்டல்கள் ஆரம்பிக்கிறார்கள். தரமாக பொருட்கள் தருகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் வேலை, அதிகாரிகள் வேலையாகும்.

உணவு கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் தேவை. இங்கிருந்துதான் காரைக்காலுக்கும் செல்கிறார்கள். தரமான பொருட்கள் விற்கிறார்களா என்று கண்காணிக்க ஆட்கள் இல்லை. சில மருந்து கம்பெனிகள் ஆந்திரத்தில் காலாவதியான மருந்துகளை இங்கே கொண்டு வந்து ரீபேக் செய்து மார்க்கெட்டில் விற்கிறார்கள். ஆறு மாதங்கள் முன்பு இதைப் பார்த்து பேட்டி தந்தவுடன் அந்நிறுவனத்தை மூடிவிட்டார்கள். இதுபோன்று நிறைய உள்ளது.
தரமான பொருட்களை போன்று டூப்ளிக்கேட் பொருட்கள் தயாரித்து விலை குறைத்து தருவதையும் பலர் வாங்குகின்றனர். நுகர்வோருக்கு பல சிக்கல் உள்ளது. நுகர்வோர் அமைப்புகள் வாரத்தில் ஒரு நாள் சில மணி நேரம் செலவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மாநிலத்தை பொறுத்தவரை குடிமைப்பொருள் துறை இதை கண்காணிக்க வேண்டும். அதற்கான வேலை நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது மக்கள்தான்.
பொருட்கள் தரம் பற்றியோ, விலை பற்றியோ நுகர்வோர் பலரும் கேள்விகேட்பதில்லை. அந்நிலை இருக்கக் கூடாது. மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு அதிகம் தேவை. அரசு தரும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகமாகவுள்ளது. சில ஆண்டுகளில் சிறுநீரகம் பாதிக்கப்படும்.குடிநீர், பால், மருந்து கலப்படம், பிளாஸ்டிக் அரிசி, முட்டை இதுபோன்ற நிறையவுள்ளது. நுகர்வோர் சங்கம் செய்யவேண்டிய வேலை அதிகமுள்ளது. மக்கள் இதை புரிந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்பட்டு தரமான பொருட்கள் வாங்க முடியும். தரமில்லா பொருட்களால் உடல் பாதிப்பு சிகிச்சை குறையும்” என்று அவர் கூறினார்.